நாடாளுமன்றில் சம்பந்தனின் வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர்
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசனின் பெயரை அறிவித்துத் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் காலமானதால் 9ஆவது நாடாளுமன்றத்தில் ஆசன வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றச் செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறியப்படுத்தப்பட்டது.
இந்தநிலையில், குறித்த வெற்றிடத்தை நிரப்புவதற்கான உறுப்பினரை அறிவிக்குமாறு திருகோணமலை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருக்குத் தேர்தல் ஆணைக்குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.
தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு
இதற்கமைய, இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக கதிரவேலு சண்முகம் குகதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
2020ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனுக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார்.
இதனடிப்படையில் 16,170 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |