நெல் கொள்வனவுக்கு புதிய கடன் திட்டம்

By Mayuri Feb 15, 2024 07:57 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக ‘மடபன’ என்ற புதிய கடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

சிறு மற்றும் மத்திய தர அரிசி ஆலை உரிமையாளர்கள், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்கள் மற்றும் தொகை நெல் சேகரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிவர்திக்கும் வகையில் இந்த கடன் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தமுறை பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்வதற்காக மடபன கடன் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மக்கள் வங்கி, இலங்கை வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றினால் இந்த கடன் வசதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடன் திட்டத்தின் கீழ், 09 பில்லியன் ரூபா கடன் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு அதிகபட்சமாக 50 மில்லியன் ரூபாவும், நெற் களஞ்சியசாலை உரிமையாளர்களுக்களுக்கும் தொகை நெல் சேகரிப்பாளர்களுக்கும் அதிகபட்சமாக 25 மில்லியன் ரூபா வரை கடனாக வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த கடனை திருப்பிச் செலுத்துவதற்கு 180 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 சதவீத வருட வட்டி வீதத்தில் 4 சதவீதம் திரைசேறியினால் உரிய வங்கிகளுக்கு வழங்கப்படும்.

அதன்படி, கடன் பெறுநர்கள் 11 சதவீதம் மட்டுமே வருட வட்டி செலுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நல்ல விலையை பெற்றுக்கொடுப்பதோடு, மக்களுக்கும் நியாயமான விலையில் அரிசியை பெற்றுக் கொடுப்பதே இந்தகடன் திட்டத்தின் நோக்கமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.