2029ல் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாக வருவார் – ராமநாதன் அர்ச்சுனா உறுதி
தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் அதிருப்தி, எதிர்காலத்தில் ராஜபக்ச குடும்பத்தை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவரும் சூழலை உருவாக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “இதைக் குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். 2029ஆம் ஆண்டு நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார். அதை யாராலும் தடுக்க முடியாது” எனத் திட்டவட்டமாகக் கூறினார்.

தனிப்பட்ட முறையில் நாமல் ராஜபக்ச ஆட்சிக்கு வருவதை விரும்பவில்லை என்றாலும், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலையைப் பார்க்கும்போது மக்கள் மீண்டும் ராஜபக்சக்களிடம் அதிகாரத்தை ஒப்படைக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாமல் ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி தேவையில்லை என்றும், அவர் நேரடியாக ஜனாதிபதி பதவியை அடைவார் என்றும் அர்ச்சுனா தெரிவித்தார். அத்தகைய காலகட்டத்தில் தாம் அரசியலில் இருக்காமல் இருக்கலாம் என்றாலும், தாம் கூறியது நிச்சயம் நடைபெறும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
சஜித்தின் முக்கிய குறைபாடு

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை விமர்சித்த அவர், ஒரு வலுவான எதிர்க்கட்சித் தலைவர் எப்போதும் மக்களின் பிரச்சினைகளை வெளிப்படையாக முன்வைக்கத் துணிவாக இருக்க வேண்டும் என்றார்.
“சஜித்தின் முக்கிய குறைபாடு அவர் மிகவும் மென்மையானவர் என்பதுதான். எதிர்க்கட்சியில் இருக்கும்போது பூங்கொத்துகளை வீச முடியாது; தேவையான இடத்தில் செங்கற்களையே வீச வேண்டும்,” என அவர் சாடினார்.
அதேவேளை, சாமர சம்பத்தின் பேச்சுத்திறனைப் பாராட்டிய அர்ச்சுனா, அவரிடம் தலைமைத்துவப் பண்புகள் போதுமான அளவில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
இறுதியாக, தமிழக நடிகர் விஜயின் அரசியல் எழுச்சியை தாம் முன்கூட்டியே கணித்தபோது பலர் தன்னை ‘பைத்தியக்காரன்’ என விமர்சித்ததாக தெரிவித்த அவர், பின்னர் விஜய் அரசியலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்ததைப் போலவே, நாமல் ராஜபக்ச தொடர்பாக தாம் கூறும் கணிப்பும் ஒருநாள் நிஜமாகும் எனத் தெரிவித்தார்.