முத்துநகர் காணி பிரச்சினை தொடர்பில் எதிர் கட்சி தலைவர் வெளியிட்ட கருத்து
திருகோணமலை (Trincomalee) பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முத்து நகர் காணி பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்டசி தலைவர் சஜித் பிரேம தாசவிடம் கலந்துரையாடப்பட்டது.
அதன்படி, இன்று (23) எதிர்கட்சி தலைவரை முத்து நகர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் சந்தித்து தெளிவுபடுத்தினார்.
இந்த பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நாட்களில் தெளிவுபடுத்த எண்ணியுள்ளதாக குறிப்பிட்ட எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவரின் கருத்து
இது குறித்து அவர் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தின் பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மூன்று கிராமங்களை சேர்ந்த 1000 குடும்பங்கள் 800 ஏக்கர் காணியில் 53 வருடங்கள் நெல், சோளம், வெண்டைக்காய், தர்பூசணி மற்றும் பேரிச்சை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர்.
பயிர்செய்கைக்காக தனியான வாவிகளும் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இந்த பிரதேசத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு கடந்த வருடங்களில் பல்வேறு அரசாங்கங்களினால் உர மானியங்கள் கூட வழங்கப்பட்டிருந்தன.
2023 இல் துறைமுக அதிகார சபை பயிர் செய்கை நடவடிகைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து 2024 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுக்கமைய 2025 பெப்ரவரி மாதத்திலிருந்து விவசாயிகள் அங்கிருந்து வெளியேற்றப்படும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பல்வேறு சந்தர்ப்பங்களில் தமது விவசாய நிலங்களுக்கு காணி உறுதிப் பத்திரம் கோரியிருந்த போதிலும், பிரதேச செயலாளர் அதற்கு அனுமதியளிக்கவில்லை.
தற்போது வரையில் இரு சூரிய மின்சக்தி (புதுப்பிக்கத்தக்க மின்சக்தி) நிறுவனங்களுக்கு இந்த பயிர் செய்கை நிலத்தில் 200 ஏக்கர் காணியை பெற்றுக் கொடுத்து, அதில் சூரிய மின் உற்பத்தி நிலையமொன்று இயங்கி வருகிறது.
நாட்டில் புதுப்பிக்க தக்க மின் உற்பத்தியை உருவாக்கும் விடயத்தோடு நாம் இணங்குகிறோம். இருந்த போதிலும் 53 வருடங்களாக வாவி அமைத்து பயிர் செய்யப்பட்ட விவசாய நிலங்களுக்கு நட்டஈடு அல்லது மாற்று ஏற்பாடுகளை பெற்று கொடுக்காமல் இதுபோன்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிக்கிறோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரச்சனைக்கு எடுக்கவுள்ள தீர்மானம்
Citizen voice வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று(22) வருகை தந்திருந்த திருகோணமலை முத்துநகர் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் சிலரைச் சந்தித்து கலந்துரையாடியபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இந்த காணியைப் பயிர் செய்கைக்காக பெற்றுக்கொடுக்க முடியாதென்றால், நீர்பாசன வடிகாளமைப்பு வசதிகளுடன் கூடிய மாற்று இடமொன்றை பெற்று கொடுக்க வேண்டும்.
சோலர் கட்டமைப்புக்கு 100 ஏக்கர் காணி தேவைப்பட்டாலும் 200 ஏக்கர் காணியை பலவந்தமாக அபகரிக்க பார்க்கின்றனர்.
விவசாயிகளுக்கு இல்லாமல் போகும் காணிகளுக்கு நிவாரணத் தொகையை பெற்றுக்கொடுத்து, ஏனைய இடங்களில் பயிரிடுவதற்கு அனுமதியாளிக்கப்பட வேண்டுமென்றும், தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் விவசாயிகளை பாதுகாப்போம் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அரசாங்கம் விவசாயிகளிடமிருந்து காணியை இவ்வாறு அபகரிப்பதை ஏற்று கொள்ள முடியாது.
தேர்தல் மேடைகளில் இந்த பூமிக்கு பாதுகாப்பளிப்போம் என்று அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள் கூட வாக்குறுதி வழங்கியிருந்தாலும் இன்று அந்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக மீறப்பட்டு வருகின்றன.
அதன் காரணமாக ஒரு பாடசாலை, இரு கோவில்கள் மற்றும் வாவியுடன் கூடிய இதுபோன்ற பயிர் செய்கை நிலத்தை அபகரிக்க இடமளிக்க முடியாது. தற்போது வரையில் முத்து நகர் வாவி சமதரையாக உடைக்கப்பட்டு, அழிக்கப்பட்டுள்ளன. நான்கு வாவிகளில் மூன்று வாவிகளே இன்றையளவில் எஞ்சியுள்ளது.
ஆனபடியால் இந்த பிரச்சினையை கிட்டிய காலத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு எதிர்பார்க்கின்றேன்.
மேலும், இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச்.தாலிப் அலி, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தன்சுல் அலீம் உள்ளிட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |