திருகோணமலை விவசாயிகள் நாடு முழுவதும் போராட்டம்
திருகோணமலை (Trincomalee) - முத்து நகர் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு அரசிடமிருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால் விவசாயிகளை ஒன்றிணைத்து நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக முத்துநகர் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
முத்துநகர் பகுதியில் விவசாயத்தில் ஈடுபட்டுவந்த விவசாய காணிகளிலிருந்து விவசாயிகளை வெளியேற்றி அவற்றை சோலார் மின் திட்டத்துக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமது காணிகளை தமது விவசாயத்துக்கு மீள வழங்குமாறு கோரியும் கடந்த 14ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக முத்துநகர் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் போராட்டம்
இதன்போது, எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு வழங்குவதாக விவசாயிகளுடனான கலந்துரையாடலின் போது அரச தரப்பிலிருந்து உறுதிமொழி வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையிலேயே குறித்த விவசாயிகள் இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இது முத்துநகர் விவசாயிகளுக்கு மாத்திரம் உள்ள பிரச்சனை அல்ல. மாறாக இது விவசாய நிலங்களில் சோலாரை பூட்டி அவற்றை மலட்டு நிலங்களாக மாற்றுவதால் பாதிப்படைகின்ற விவசாயினதும், அரிசியை உணவாக உட்கொள்ளுகின்ற ஒவ்வொரு மனிதனுடைய பிரச்னையுமாகும்.
நாங்கள் சோலார் மின் உற்பத்தித் திட்டத்துக்கோ அல்லது நாட்டின் அபிவிருத்திக்கோ எதிரானவர்கள் அல்லர். மாறாக பொன் விளையும் பூமியான விவசாயம் மேற் கொள்ளுகின்ற பூமியில் சோலார் மின் திட்டத்துக்கான தொகுதிகளை பூட்டி அவற்றில் விவசாயத்தை மேற்கொள்ளவிடாது அவற்றை மலட்டு நிலங்களாக மாற்றுவதையே நாங்கள் எதிர்க்கின்றோம் என்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |