கல்முனை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயம்
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது நேற்று (9) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெல் அறுவடை முன்னாயத்த பணியில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்று சடுதியாக பிரதான வீதியை நோக்கி இரு வழி சாலையை மறித்து திரும்ப முற்பட்ட வேளை மறுமுனையில் இருந்து வேகமாக பயணம் செய்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் விசாரணை
குறித்த விபத்தில் உழவு இயந்திரத்தை செலுத்திய சாரதியின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த இரு இளைஞர்களில் ஒருவருக்கு கை உடைவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து,விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் பொது இணக்கப்பாட்டுடன் சமாதானமாக செல்ல முற்பட்ட போதும் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிந்தவூர் போக்குவரத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதுடன் விபத்தில் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |