மக்களுக்கு மேலும் பல நிவாரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும்: ரணில் உறுதி
அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களின் பலனாக நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மக்களுக்கு மேலும் பல நிவாரணங்களைப் பெற்றுகொடுக்க எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் இன்று (06.03.2024) நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம்
இது தெராடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, குறித்த செயற்பாடுகள் அனைத்தும் அறிவியல் முறைமைகளுக்கு அமைய, படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதிகாரத்திற்காக ஒரு போதும் தான் பொய் சொல்லவில்லை என்பதோடு, அதிகாரத்திற்காக அன்றி நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே தனது நோக்கமாகும்.
சில அரசியல் குழுக்கள் அதிகாரத்தைப் பெற்றுகொள்ளும் நோக்கில் யதார்த்தத்தை மறந்துவிட்டு, கற்பனைக் கதை சொல்கிறார்கள். இன்று நாட்டின் முன்பிருக்கும் பிரச்சினைகளுக்கு, சில்லறைத்தனமான தீர்வுகள் இல்லை என்றும், அவ்வாறான தீர்வுகளால் நாட்டின் பொருளாதாரத்தை மீளமைக்க முடியாதென்பதை அடிப்படை பொருளாதார அறிவுள்ளவர்கள் அறிவர்.
அரசாங்கம் பயணிக்கும் பாதையின் வெற்றி உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த பாதையில் முன்னேறிச் செல்வதற்கான சட்டத் திட்டங்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், பொருளாதார மறுசீரமைப்புச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
போகும் பாதையில் முன்னேறிச் சென்று பொருளாதாரம் வலுவடைவதன் பலனை, நாடு என்ற வகையில் அடைந்துகொள்வதா? இல்லாவிடின் அந்த செயன்முறையிலிருந்து விடுப்பட்டு ஓரிரு வருடங்களுக்கு முன்பிருந்த இருள் யுகத்துக்குள் மீண்டும் செல்வதா? என்பதை தீர்மானிக்க வேண்டும்.
மின்சாரக் கட்டணம்
இன்று நமது நாடு ஓரளவு பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். எனினும், இதனை ஏற்றுக்கொண்டதாக காட்டிக் கொள்ளாமல், நாம் முன்னெடுத்துள்ள வேலைத் திட்டத்தை விமர்சிப்பவர்களும் இருக்கின்றனர்.
பொருளாதாரம் வலுவாக இருப்பதாகத் தோன்றினாலும், மக்கள் அதை உணரவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். மக்கள் மீது தேவையற்ற வகையில் வரிச் சுமையை அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலைகள் தேவையற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.
ஆபத்தான நிலை எங்களுக்கு ஏன் ஏற்பட்டது? எமது பொருளாதாரம் ஏன் வங்குரோத்தடைந்தது? கடந்த கால அரசாங்கங்கள் தொலைநோக்குப் பார்வையற்ற முடிவுகள் எடுத்தமை ஒரு காரணமாகும். அரசாங்கத்தின் பல சாதகமான வேலைத் திட்டங்களை பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்து, சீர்குலைத்ததும் மற்றொரு காரணமாகும். இந்தக் கட்சிகள் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தின.
இதனால் நாட்டுக்கு முறையான, பரிபூரணமான பொருளாதாரத் திட்டமொன்று தேவைப்பட்டது. இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்த நாம் பல சந்தர்ப்பங்களில் முயற்சித்தோம்.
பொருளாதார நெருக்கடி
எனினும், இவ்வாறான திட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வாய்ப்புக் கிடைக்காமல் போனது. வளர்ச்சியடையாத நாட்டில் பாட்டாளி வர்க்கம், அரசுக்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்தும்போது, அரசாங்கம் ஒரு திட்டத்தின் மூலம் நாட்டை எவ்வாறு மேம்படுத்தியது என்பதை இது காட்டுகிறது. இது அரசின் அடிப்படைப் பொருளாதாரத் திட்டம்.
இது வெற்றியடைந்ததாகவும், இதனால் மக்கள் பொருளாதார ரீதியாக மட்டுமன்றி, மதிப்புகளின் அடிப்படையில், நல்ல சமூக உறவுகளுடன், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தனர் என்று இந்தச் சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தகைய அறிவியல் மற்றும் திட்டமிட்ட வழியை நாங்கள் இதற்கு முன்னர் பின்பற்றவில்லை.
சில குழுக்கள் அத்தகைய வேலைத் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கவில்லை. இதனால் நாட்டிற்கு என்ன நடந்தது என்பதை அனைவரும் அறிவர். நாடு வங்குரோத்தடைந்தது. கடனைச் செலுத்த முடியாமல் போனது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் போனது. சாதாரண குடிமகன் முதல் பெரிய தொழிலதிபர் வரை அனைவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வரிசைகளின் யுகம் ஏற்பட்டது. பலர் தொழில்களை இழந்தனர். தொழில்களும் வணிகங்களும் சரிந்தன. சிலர் நாட்டை விட்டு வெளியேறினர். நாடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
பொருளாதார நரகத்தில் நாடு விழுந்தது.ஆட்சி நிர்வாகம் சீர்குலைந்தது. பொருளாதார ரீதியில் மட்டுமன்றி சமூக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையான ஆபத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. இந்த நிலைமையில் இருந்து நாட்டை மீட்கும் சவாலை யாரும் ஏற்க முன்வரவில்லை. அழைக்கப்பட்ட அனைவரும் மறுத்துவிட்டனர். தீயில் குதித்து தீயை அணைக்கும் தைரியம் யாருக்கும் இல்லை.
ஆனால் நாட்டுக்காக அந்த சவாலை நான் ஏற்றுக்கொண்டேன். தீயின் நடுவே சென்று தீயை அணைக்க ஆரம்பித்தேன். அந்த அயராத முயற்சியின் பலனை இன்று நாடு முழுவதும் அனுபவித்து வருகிறது. இந்த நேரத்தில், அந்த மாபெரும் முயற்சியில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவரையும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன் என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |