ஆசியாவின் இஸ்ரேலாக மாறவுள்ள இலங்கையின் வடக்கு - கிழக்கு
இந்தியாவின் 29ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதோடு, இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் என தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான அமைப்பின் தலைவர் மெதகொட அபேதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(29) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கோயில் நிர்மாணிப்பு
மேலும் தெரிவிக்கையில், சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கையில் 21 ராமர் கோயில்களை நிர்மாணிப்பதாக இந்தியா குறிப்பிடுகிறது. இந்து பிராமண சூழலில் பௌத்த மதம் பாதுகாக்கப்படாது.
இதனால் தான் இந்தியாவில் பௌத்த மதம் இல்லாதொழிந்தது. இவ்வாறான நிலை இலங்கையில் ஏற்பட இடமளிக்க முடியாது.
இலங்கையின் நட்பு நாடு என்று குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா ஆரம்ப காலத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் ஊடாக தமது நிகழ்ச்சி நிரலை செயற்படுத்திக் கொள்ளவே இந்தியா முயற்சிக்கும்.
திருகோணமலை துறைமுகம் பற்றி தற்போது எவரும் கவனம் செலுத்துவதில்லை. திருகோணமலை துறைமுகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இந்தியா பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டுள்ளது.
ஒப்பந்தத்தின் விளைவுகள்
இந்த செயற்றிட்ட வலயத்துக்குள் புராதன கோயில்கள் மற்றும் பௌத்த விகாரைகள் உள்ளன.
இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்திய ஆட்சியாளர்களால் பலவந்தமான முறையில் இலங்கைக்கு திணிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால் பல விளைவுகள் ஏற்பட்டன.
நீதிமன்ற உத்தரவினால் தான் இந்த ஒப்பந்தம் இன்றும் இழுபறிநிலையில் உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்களை செயற்படுத்துமாறு இந்தியா இன்றும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கிறது.
குறிப்பாக இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது.
இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அதன் பின்னர் இலங்கைக்குள் எல்லையை பாதுகாக்க வேண்டிய போராட்டம் தலைதூக்கும்.
ஆகவே ஆட்சியாளர்கள் தாம் தற்காலிக உரிமையாளர்கள் என்பதை மனதில் வைத்துக் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |