நாட்டின் பிரதான பகுதிகளில் ஆபத்தான அச்சுறுத்தல்கள் இல்லை என்பது உறுதி: பாதுகாப்பு அமைச்சு
சுற்றுலாப் பயணத் தளங்கள் மற்றும் நாட்டின் பிரதான பகுதிகளில் குண்டுத்தாக்குதல்கள் உட்பட எந்தவொரு ஆபத்தான அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுநிலை எயார் வைஷ் மார்ஷல் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த தெரிவித்துள்ளார்.
தாக்குதல் தொடர்பான தகவல்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பிரதான சுற்றுலாத்தளங்களை மையப்படுத்திய தாக்குல்கள் நடத்தப்படவுள்ளதாக எமக்கு புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கு அக்டோபர் முதல் வாரத்திலேயே தகவல்கள் கிடைத்திருந்தன.
இதனையடுத்து தேசிய பாதுகாப்புச் சபை உடனடியாக கூட்டப்பட்டு எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், இவ்விடயம் சம்பந்தமாக வெளிநாடு தனது பயணிகளுக்காக முன்னெச்சரிக்கையை விடுத்திருந்தது. அதனையடுத்தே விடயம் பகிரங்கமானது.
உயர்த்தப்பட்டுள்ள பாதுகாப்பு
ஆனால் அதற்கு முன்னதாகவே சுற்றுலாத்தளங்கள் உட்பட நாட்டின் பிரதான பகுதிகள் அனைத்துமே பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.
தற்போது அந்த நிலைமை மேலும் தீவிரமாக்கப்பட்டு பாதுகாப்பு அதியுச்சமான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு பிரஜைகளும் அச்சமடைய வேண்டியதில்லை.
நாட்டில் அச்சுறுத்தல் நிலைமைகள் அனைத்தும் களையப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகள் உட்பட நாட்டின் பிரஜைகள் அனைவரும் சுதந்திரமாக நடமாட முடியும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |