மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானப் பணிகள்! வெளியான அதிரடி உத்தரவு
யாழ்ப்பாணம், மண்டைதீவு தீவில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகம் தொடர்பான அனைத்து கட்டுமானப் பணிகளையும், முறையான சுற்றாடல் அனுமதி கிடைக்கும் வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) உத்தரவிட்டுள்ளது.
1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ், சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு (EIA) அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறும் வரை எந்தவொரு பாரிய திட்டத்தையும் முன்னெடுக்க முடியாது.
கிரிக்கெட் மைதானப் பணிகள்
மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் நிலப்பரப்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வரவில்லை என வனப்பாதுகாப்பு திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், இந்தத் திட்டத்தினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்த அறிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) நிறுவனம் இன்னும் சமர்ப்பிக்கவில்லை என மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மகேஷ் ராஜபக்ச தெரிவித்தார்.
சுற்றாடல் அனுமதி பெறுவதற்கு முன்னரே அங்கு மண் அகழ்வு மற்றும் நிலத்தை சமப்படுத்தும் பணிகள் (Earthworks) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
சட்ட நடவடிக்கை
இதனைத் தொடர்ந்து, கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பணிகளை நிறுத்துமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி கட்டுமானப் பணிகள் தொடருமானால், சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை எச்சரித்துள்ளது.
முறையான அனுமதியின்றி பணிகள் ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறி, இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு சங்கம் (WNPS) இந்தத் திட்டத்திற்கு எதிராக அண்மையில் குரல் எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.