கால்டன் இல்லத்தில் இருந்து மகிந்தவின் மகிழ்ச்சி பதிவு!
மக்கள் மனதில் இடம் பிடிக்காத ஒருவர் தலைவன் ஆக முடியாது என்றும், அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள் எனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
“நான் எனது வாழ்நாளில் அதிகளவான நேரத்தை மக்களுக்காக செலவிட்டேன். காலம் சென்றாலும் மக்கள் அன்பு குறையாது. அரசியல் பலம் இருந்தாலும் இல்லாவிடினும் மக்கள் என்னுடன் இருக்கிறார்கள்.
மக்களும் குழந்தைகளும் என்னை சூழ்ந்திருந்திருக்கிறார்கள். மக்களின் மனதில் நான் இடம் பிடித்திருக்கிறேன். மக்கள் மனதில் இடம் பிடிக்காத ஒருவர் தலைவன் ஆக முடியாது.
மேலும், நான் அரச வாசஸ்தலத்திலிருந்து வெளியேறி, அம்பாந்தோட்டையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்த போது என்னை பார்வையிட பல மக்கள் ஒன்று திரண்டனர்.
அரசியல் பலத்தை விட என்னிடம் மக்கள் பலம் உண்டு. இது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து , முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தான் தங்கியிருந்த, கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தார்.
எனினும் நேற்று குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, தன்னை பார்வையிட ஆதரவாளர்களை தாமாக அழைத்துவருவதில்லை” என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.