ஈரானின் பயங்கர தாக்குதல்.. படுகாயமடைந்த இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த ஈரான் தாக்குதலில் காயமடைந்த 63 பேரில் மூன்று இலங்கை நாட்டினரும் அடங்குவர் என குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
முகநூல் பதிவு ஒன்றில், குவைத்தின் பிரதான விமான நிலையம் (T1) மீதான தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையை குவைத்திற்கான இலங்கைத் தூதர் லக்ஷித ரத்நாயக்க மற்றும் தொழிலாளர் திணைக்களத் தலைவர் எம்.ஆர்.சி.பி. ஏகநாயக்க ஆகியோர் பார்வையிட்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்தபோது சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் விமான நிலையத்தில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும், கீழே விழுந்த கண்ணாடிச் சில்லுகளால் அவர்களுக்குத் தலை மற்றும் பிற பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டதாகவும் தூதர் ரத்நாயக்க தெரிவித்தார்.
மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களில் யாருடைய நிலையும் கவலைக்கிடமாக இல்லை என்றும் அவர் கூறினார்.
மேலும், அவர்கள் ஓரிரு நாட்களில் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரம் தொடர்பாக குவைத் அரசாங்க அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை அறிந்திருக்குமாறு, குவைத்தில் உள்ள அனைத்து இலங்கையர்களையும் இலங்கைத் தூதரகம் கோரியுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக குவைத் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்தத் தாக்குதலால் விமான நிலையத்தின் சில பகுதிகளுக்கும் அருகிலுள்ள தூதரகங்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, ஈரானிய இலக்குகளுக்கு எதிரான சமீபத்திய அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாகவே இது நடத்தப்பட்டதாக விவரித்துள்ளது.
குவைத் இந்தத் தாக்குதலை ஒரு ஆக்கிரமிப்புச் செயல் எனக் கண்டித்ததோடு, பதிலடியாக இராஜதந்திர நடவடிக்கைகளையும் எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.