கிண்ணியா பல்நோக்கு கூட்டுறவுச் சங்க புதிய நிர்வாக சபை எழுந்துள்ள குற்றச்சாட்டு
கிண்ணியா பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவு இடம்பெற்றது.
கிண்ணியா பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் வீழ்ச்சிப் பாதையில் இருப்பதாக முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு மத்தியில், அதன் புதிய நிர்வாக சபைத் தெரிவு நேற்று முன்தினம்(28) இடம்பெற்றது.
புதிய நிர்வாகம்
54 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட இந்தச் சங்கம், தற்போது பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் கவலை வெளியிடும் பொதுமக்கள், புதிய அரசாங்கத்தின் கீழ் மாற்றத்தை எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்களின் நேரடி மேற்பார்வையில் இந்தத் தெரிவு இடம்பெற்றது.
இருப்பினும், இந்த நிர்வாகத் தெரிவு ஒருபுறமிருக்க, சங்கத்தின் தற்போதைய நிலை குறித்து பொதுமக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
ஆரம்பிக்கப்பட்டு 54 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இந்தச் சங்கம் மக்களுக்கு எவ்வித பிரயோசனமுமற்ற நிலையில் இருப்பதாகக் குற்றம் சுமத்தப்படுகின்றது.
சுமார் 19 கிளைகளுடன் கம்பீரமாக இயங்கிய இந்தச் சங்கத்தில் ஒரேயொரு கிளை மாத்திரமே இயங்கி வருகின்றது. 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிய இடத்தில் இன்று வெறும் 5 முதல் 6 ஊழியர்களே எஞ்சியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்திலுள்ள 11 கூட்டுறவுச் சங்கங்களில், கிண்ணியா சங்கம் கடைசி இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
சீர்கேடுகள்
நிர்வாகச் சீர்கேடுகள் காரணமாகச் சங்கத்தின் அசையும் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், குட்டி கராச்சி பகுதியில் இயங்கிய மருந்தகம் மூடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

குறிப்பாக, சங்கத்திற்குச் சொந்தமான நிலமொன்று ஒரு கோடி 30 இலட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வாங்கிய சொத்துக்களும் தற்போது அழிவடைந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
60 வயதில் ஓய்வுபெற்ற முன்னாள் கிளை முகாமையாளர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், 30 வருடங்கள் பணியாற்றியும் தனக்கான பணிக்கொடை (Gratuity) இதுவரை வழங்கப்படவில்லை எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
தற்போது புதிய அரசாங்கம் அமைந்துள்ள சூழலில், தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய நிர்வாகமானது ஊழல் மோசடிகளற்ற முறையில் இயங்க வேண்டும் எனவும், இழந்த பெருமையைச் சங்கம் மீண்டும் பெற அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிண்ணியா மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.