வடிகான் திருட்டு குற்றச்சாட்டில் கைதான நகரசபை உறுப்பினர்! நீதிமன்ற உத்தரவு
காத்தான்குடி (Kattankudy) நகரசபைக்கு சொந்தமான வடிகான் கொங்கிரீட் மூடியை திருட முயற்சி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக, நகரசபை சுயேச்சை குழு உறுப்பினர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, நீதவானால் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு நபர்கள் கொண்ட பிணையில் விடுவித்து, வழக்கை செப்டம்பர் 23ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
கைது நடவடிக்கை
சம்பவத்திற்கு பின்னணியாக, கல்முனை பழைய வீதியில் பல ஆண்டுகளாக மூடியின்றி இருந்த வடிகான் ஒன்றால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்தனர்.
இதை தீர்க்க மாநகர சபை தவிசாளரிடம் எழுத்து மற்றும் வாய்மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டதும், நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால், சம்பந்தப்பட்ட உறுப்பினர் தனது சொந்த செலவில் மூடியை அமைத்ததுமாக கூறப்படுகிறது.
மூடியை நகரசபை கையகத்தில் இருந்த இடத்திலிருந்து எடுத்ததாகக் கூறி, நகரசபை களஞ்சியசாலை பொறுப்பாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உறுப்பினர் கருத்து
நீதிமன்றத்தில் சந்தேகநபர்களுக்காக, சிரேஸ்ட சட்டத்தரணி ஹக்கீம் தலைமையிலான ஐந்து சட்டத்தரணிகள் விளக்கம் வழங்கினர்.
அவர்கள், இது திருட்டாக அல்ல, பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இருந்தது என தெரிவித்தனர்.
பிணையில் வெளியான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உறுப்பினர், இது அரசியல் பழிவாங்கல் முயற்சி எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.
தமக்கு அவமானப் பெயர் ஏற்படுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், மக்களுக்கு சேவை செய்யும் வேலையில் தடை ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |