இத்தாலியிலிருந்து அழைத்துவரப்படவுள்ள கஞ்சிபாணி இம்ரான்! கைது குறித்த அரசாங்கத்தின் மறைமுக அறிக்கை

By Dharu Aug 17, 2026 05:38 AM GMT

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபாணி இம்ரான், விரைவில் இத்தாலியில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பிரதி அமைச்சரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான அருண ஜெயசேகரவினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் குற்றவாளி

''நாட்டிலிருந்து தப்பி வெளிநாட்டில் பதுங்கியிருக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிபாணி இம்ரான், மிக விரைவில் நாட்டிற்குத் திரும்பக் கொண்டுவரப்படுவார் இதுவரை சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 58 குற்றவாளிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளர்.

இந்நாட்டில் இயங்கிவரும் மிகப்பெரிய ஐந்து போதைப்பொருள் கடத்தல்காரர்களில் இவரும் ஒருவர்.

இம்ரான் குழுவுடன் தொடர்புடைய மூவர் நான்கு நாட்களுக்கு முன்பு கொண்டுவரப்பட்டனர்.

இவரையும் நாளை மறுநாள் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு, வெளிநாடுகளில் உள்ள முக்கிய கடத்தல்காரர்களை நீதியின் முன் நிறுத்துவது ஒரு அத்தியாவசியமான நடவடிக்கை என்று பாதுகாப்புப் படைகள் சுட்டிக்காட்டுகின்றன." என்றார்.