அமலும் அருட்கொடையும்
ஹஜ்ரத் அபூதல்ஹா ரலியல்லாஹீ அன்ஹீ அவர்கள் அறிவிப்பதாவது, ஒருவர் லாஇலாஹ இல்லல்லாஹ் என்று கூறினால் அவருக்கு சொர்க்கம் கட்டாயமாகிவிடுகிறது.
ஒருவர் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று நூறு தடவை ஓதினால் அவருக்கு ஓர் இலட்சத்து இருபத்து நான்காயிரம் நன்மைகள் எழுதப்படுகின்றன என்று நபி(ஸல்) அவர்கள் அருளிய போது, அப்படியானால் எங்களில் யாரும் கியாமத்து நாளில் நரகில் வீழ்ந்து நாசமாகிவிடமாட்டார்களல்லவா? என்று ஸஹாபாக்கள் கேட்டனர்.
அப்பொழுது நபி(ஸல்) அவர்கள் (அவ்வாறிருந்தும் சிலர் நரகத்திற்கு சென்று விடுவார்கள், ஏனெனில்) சிலர் ஏராளமான நன்மைகளை கொண்டு வருவார்கள்.

அவற்றை ஒரு மலையின் மீது வைத்தால் அவை அந்த மலையை கீழே அழுத்தி விடுமளவுக்கு கனமுடையவையாக இருக்கும்.
பிறகு அல்லாஹ் அவர்களுக்கு அருளியிருந்த பாக்கியங்கள் கொண்டு வரப்படும். அந்த நன்மைகள் அந்த பாக்கியங்களுக்கு எதிரில் ஒன்றுமில்லாது போய்விடும்.
பின்னர் அல்லாஹ் தன்னுடைய பேரருளினால் அவரைக் காப்பாற்றுவான் என பதிலளித்தார்கள்.
விளக்கம்
அல்லாஹ்வின் பாக்கியங்களுக்கு எதிரில் நன்மைகள் ஒன்றுமில்லாது போய்விடும் என்பதின் கருத்து கியாமத்து நாளில் நன்மை தீமை நிறுக்கப்படும் போது, அல்லாஹ் அருளிய நிஃமத்துகளுக்கு பிரதியாக மனிதன் என்னென்ன கடமைகளை நிறைவேற்றியுள்ளான்? நன்றி செலுத்தியுள்ளான் என்பதும் கணக்கிடப்படும்.
அடியானிடமுள்ள ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்வால் அருளப்பட்ட பாக்கியமாகும். ஒவ்வொரு பாக்கியத்திற்கும் ஒரு கடமை இருக்கிறது. அக்கடமை நிறைவேற்றப்பட்டதா? என விசாரணை செய்யப்படும்.
மனிதனின் உடலில் முன்னூற்றறுபது எலும்பு இணைப்புகள் இருக்கின்றன. ஒவ்வொரு இணைப்புக்கும் பதிலாக ஒரு சதகா நிறைவேற்றுவது அன் பொறுப்பில் அவசியமாகிறது.
அதாவது மரணத்தை போன்ற நிலையிலுள்ள தூக்கத்தை கொடுத்து பின்னர் காலையில் உயிருடன் விழித்தெழச் செய்கின்ற அல்லாஹ் மனிதனின் ஒவ்வொரு உறுப்பையும் சுகமாக வைத்திருப்பதற்காக என்ன நன்றி செய்யப்பட்டது என விசாரணை செய்யப்படும்.

நபி (ஸல்) அவர்கள் இதனை கூறிய போது, ”ஒவ்வொரு நாளும் இத்தனை சதகாக்கள் யாரால் முடியும்?” என்று கேட்டனர், அதற்கு நபியவர்கள், ஒவ்வொரு தஸ்பீஹீம் சதகாவாகும்.
லாஇலாஹ இல்லல்லாஹ் கூறுவதும் , அல்லாஹ் அக்பர் என கூறுவதும் சதகாவாகும். வழியில் மனிதர்களுக்கு இடையூறு தரும் (கல், முள் போன்ற) பொருட்களை அகற்றுவதும் சதகாவாகும் என பதிலளித்தார்கள்.