கோபா குழுவின் புதிய தலைவராக கபீர் ஹாஷிம்
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா) புதிய தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷிம் (Kabir Hashim) நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்தாவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவராகப் பணியாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் (Aravinda Senarath) 2025.08.06ஆம் திகதி தனது பதவியிலிருந்து விலகினார்.
இந்தநிலையில் தலைவர் பதவியில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் நோக்கில் குறித்த குழு இன்று (12) நாடாளுமன்றத்தில் கூடிய போது தலைவர் தெரிவு இடம்பெற்றது.
முன்னாள் தலைவரைப் பாராட்டினார்
புதிய தலைவர் பதவிக்கு கபீர் ஹாசிமின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல (J. C. Alawathuwala) முன்மொழிந்ததுடன், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த புதிய தலைவர், அரசியல் கருத்துவேறுபாடுகள் இன்றி நடுநிலையாகச் செற்பட்ட, சகல உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தனது பதவியை முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
அத்துடன், முன்னாள் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத்தின் பணிகளைப் பாராட்டியதுடன், அவர் மேற்கொண்ட பணியை தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாகச் செய்வதற்கு எதிர்பார்ப்பதாக கூறினார்.
புதிய திட்டங்களை வகுப்பதன் மூலம் கோபா குழுவின் பங்கை மேலும் நெறிப்படுத்தவும் பராமரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக புதிய தலைவர் மேலும் தெரிவித்தார்.