ஜனாஸா எரிப்பு விவகாரம்: துரத்தும் ரவூப் ஹக்கீம், ஒப்புக் கொண்ட அரசாங்கம்.
எம்.என்.எம்.யஸீர் அறபாத் -
ஓட்டமாவடி. கடந்த கோட்டாபாய தலைமையிலான அரசாங்கத்தில் கொவிட் -19 கொரோனா தொற்றினால் மரணித்த ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமை முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கிய மிகவும் கசப்பான ஒரு நிகழ்வாகும். உலக சுகாதார ஸ்தாபனம் கூட அடக்கம் செய்ய அனுமதியளித்திருந்த நிலையில் இலங்கையில் அடக்கம் செய்ய அனுமதியளிக்காது
இனவாத நோக்குடன் ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டமை பலரது கண்டனத்திற்குள்ளாகி இருந்தமை அனைவரும் அறிந்தவிடயமாகும். இவ் விவகாரத்தில் முதலாவது கொரோனா முஸ்லிம் ஜனாஸா எரிக்கப்பட்டது
தொடக்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் இன்றுவரை தொடராக குறித்த விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். முதலாவது ஜனாஸா எரிக்கப்பட்டபோது
சமூகவலைதள பக்கத்தில்(ட்வீட்டர்) எரிக்கப்பட்டதை கண்டித்து அறிக்கையிட்டது முதல் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அன்றைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் சர்வகட்சி கூட்டத்தில் பங்குகொண்டு ஜனாஸா எரிப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தது மாத்திரமின்றி , பாராளுமன்றத்தில் பல தடவைகள் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டி வைரஸ் இறந்தவர்களின் உடலைவிட்டு, நீரில் கலந்து பரவாது என்பதை வலியுறுத்தி வந்தார்.
மேலும், ஜனாஸா எரிப்பு இனவாத நோக்குடன் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுவதை தடுக்கும் நோக்கில் இராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டு பல நாட்டு தூதுவர்களினூடாகவும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தார், தனது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் வீதியில் இறங்கி கபன் சீலை போராட்டத்தில் கலந்து கொண்டது மாத்திரமின்றி பாகிஸ்தான் பிரதமரை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டபோது
காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்டு மிகவும் ஆக்ரோஷமான கருத்துக்களை வெளிப்படுத்தியமையும் மறக்கமுடியாது. ஜனாஸா எரிப்பு நிறுத்தப்பட்டாலும் அரசாங்கம் செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளவைப்பதற்கும், அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிலும் முஸ்லிம்களுக்கு மாத்திரமின்றி இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் பௌத்தர்கள்,இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் உட்பட அனைவருக்கும் நியாயம் கிடைக்கவே குரல் கொடுத்துக் கொண்டுவருகிறார்.
இவ் விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டை அறிந்து கொள்ளவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கவுமாக தனது பணிகளை ரவூப் ஹக்கீம் தொடர்கிறார்.
அதன் தொடரில் 28.04.2023 இல் பாராளுமன்றத்தில் கேள்வி,பதில் நேரத்தில் முன்னறிவித்தலின்படி, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கேள்விகளைத் தொடுத்ததை காணமுடிந்தது.
அதன்போது,கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரை தகனம் செய்த விடயத்தில் அரசாங்கம் தவறாக வழிநடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல. ஒப்புக்கொள்ள நேர்ந்தது. அடக்கம் செய்தல், தகனம் செய்தல் தொடர்பான பிரச்சினையில் தீர்மானம் எடுப்பதற்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டன. நிலக் கீழ் நீர் ஊடாக வைரஸ் பரவுவதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் பேராசிரியர் ஒருவர் தெரிவித்து வந்தமை அனைவரும் அறிந்ததே, நீங்கள் அதனை ஏற்றுக் கொள்கின்றீர்களா?
என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் கேள்வியை தொடுத்த ரவூப் ஹக்கீம் தொடர்ந்து பேசும் போது, நிலத்தடி நீரினூடாக எந்த வைரஸும் பரவாது என்பதை தற்போது பல்வேறு தொற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் வைரஸ் குறித்த நிபுணர்கள் அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரற்ற உடலில் வைரஸ் பரவாது,மனிதன் இறந்துவிட்டால் வைரஸும் இறந்துவிடும். மனித உடலிலுள்ள கலன்கள் உயிருடனில்லை எனில் அவற்றால் உயிர் வாழ முடியாது. இதனால் அரசாங்கம் தவறாக வழிநடாத்தப்பட்டுள்ளது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? என ரவூப் ஹக்கீம் கேட்டபோது, பின்வருமாறு பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல : "உங்களது கருத்துடன் நான் முழுமையாக இணங்குகின்றேன்.
அந்தப் பேராசிரியையின் பெயர் மெத்திகா. பேராசிரியர்கள் கூட தவறுக்குப் பின் தவறிலைப்பார்கள் அவை மிகவும் மோசமான தவறுகள். உலக சுகாதார ஸ்தாபனத்தின் தீர்மானத்தை பெரும்பாலான துறைசார் வல்லுநர்கள் ஆதரிக்கின்றனர்.
ஆகவே அங்கே ஒரு சர்ச்சை இருப்பதாக நான் நினைக்கின்றேன். அத்துடன் அதை நீங்கள் எவ்வாறு கையாளப்போகின்றீர்கள் என்பது அடுத்த விடயம். குறிப்பிட்டு அந்த விடயத்தில் வல்லுநர்கள் என அழைக்கப்படுபவர்களினால் தவறான வழிகாட்டுதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதனையும் நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதன் பின்னர் மீண்டும் ரவூப் ஹக்கீம் கேள்விகளைத் பின்வருமாறு தொடுத்தார்
அரசாங்கத்தினுடைய தவறுகளை நீங்கள் தற்போது பகுதியளவில் ஏற்றுக் கொள்கின்றீர்கள், இது தவறான தீர்மானம் என பாராளுமன்றத்தில் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. இந்த தீர்மானத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்குமா? மூவாயிரத்திற்கும் அதிகமான தனிநபர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இராணுவக் குழுக்கள் நிறுத்தப்பட்டிருந்தன, இராணுவ அணி வகுப்பு நடைபெற்றதுடன் பெரும் தொகை அரச நிதி விரயமாக்கப்பட்டிருந்தது, அதன் பின்னர் இறுதி செலுத்துவதற்கான சந்தர்ப்பம் மக்களுக்கு மறுக்கப்பட்டிருந்ததுடன் இருவர் மாத்திரமே அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.இது அவர்களின் முழுக் குடும்பத்தையுமே அதர்ச்சியடையச் செய்துள்ளன. ஆகவே, அந்த அனைத்து குடும்பங்களும் வழக்குத்தாக்கள் செய்யவுள்ளன.
இவ்வாறு ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பிற்குமான குரலாக பாராளுமன்றத்தில் ஒலித்த ரவூப் ஹக்கீமின் குரலுக்குப் பதிலாக ஜனாஸா எரிப்பு விவகாரத்தில் அரசாங்கம் தவறை ஏற்றுக் கொண்டதை காணமுடிந்தது.