பத்து உபதேசங்கள்
ஹஜ்ரத் முஆத் இப்னி ஜபல்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: எனக்கு ரசூலுல்லாஹி(ஸல்) அவர்கள் பத்து விஷயங்கள் உபதேசித்தார்கள்.
* நீர் கொல்லப்பட்டாலும், தீயிலிட்டு எரிக்கப்பட்டாலும் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை கற்பிக்காதீர்.
* பெற்றோருக்கு மாறு செய்யாதீர், அவர்கள் உம்முடைய மனைவியை விட்டும் அல்லது உமது பொருளை விட்டும் நீங்கி விடுமாறு உத்தரவிட்டாலும் சரியே
* கடமையான தொழுகையை மனமுரண்டாக விட்டுவிடாதீர், எம்மனிதன் கடமையான தொழுகையை மனமுரண்டாக விட்டு விடுவானோ அவனை விட்டு அல்லாஹ்வின் பொறுப்பும் நீங்கிவிடுகின்றது.
* மது அருந்தக்கூடாது, ஏனெனில் அது சகல தீமையான மானக்கேடான காரியங்களுக்கும் வேராகும்.
* அல்லாஹ்வுக்கு மாறுபாடு செய்யாதீர், அதனால் அல்லாஹ்வின் கோபம் இறங்குகிறது.
* போர்க்களத்தில் கூட்டாளிகள் யாவரும் மடிந்து போனாலும் புறமுதுகிட்டு ஓடலாகாது.
* ஓரிடத்தில் பிளேக், காலரா போன்ற நோயினால் மனிதர்கள் மரணித்தாலும் அவ்விடத்தை விட்டு நீர் வெருண்டோட வேண்டாம்.
* உமது குடும்பத்தார் மீது தாராளமாக செலவழிப்பீராக
* அவர்களுக்கு ஒழுக்கங் கற்பிக்க வேண்டி அவர்களை விட்டும் உமது பிரம்பை அகற்றிக் கொள்ள வேண்டாம்.
* அல்லாஹ்வை பற்றி அவர்களை அச்சுறுத்திக் கொண்டேயிருப்பீராக
விளக்கவுரை
பிரம்பை அகற்றக்கூடாது என்பதில் அர்த்தமாவது தந்தை கண்டிப்பதில்லையே அடிப்பதில்லையே ஆதலால் மனம் போன போக்கில் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று பிள்ளைகள் கவலையற்று இருந்துவிடக்கூடாது என்பதாகும்.
மாறாக அவர்களை ஷரீஅத்தில் சொல்லப்பட்டதற்கேற்ப சிற்சில சமயங்களில் அடிக்கவும் செய்ய வேண்டும், ஏனெனில் அடிக்காமல் பெரும்பாலும் நல்லொழுக்கம் பெறுவதில்லை.
இக்காலத்தில் பிள்ளைகளை ஆரம்பத்திலேயே அன்பு, பாசத்தின் மேலீட்டால் பெற்றோர்கள் கண்டிப்பதில்லை, எப்பொழுது அவர்களில் கெட்ட பழக்கங்கள் குடிகொண்டு முதிர்ந்து போய்விடுகின்றனவோ அப்பொழுது அழுது புலம்பித்திரிகின்றனர்.
உண்மையில் இது பிள்ளைகளின் மீது காட்டப்படும் அன்பு, பாசம் அல்ல, மாறாக அவர்களை தீய செயல்களை விட்டு தடுக்காமலிருப்பதும் அடித்துக் கண்டிப்பதை அன்புக்கு மாற்றமான செயலென நினைப்பதும் கடும் துரோக செயலாகும்.
பிள்ளைகளுக்கு உண்டான புண்ணை அறுவைசிகிச்சை செய்தால் வலிக்கும் என்ற காரணத்திற்காக அறுவைசிகிச்சையே வேண்டாம் அது வளரட்டும் என்ற எந்த அறிவுள்ள பெற்றோர்களாவது விரும்புவார்களா?
மாறாக பிள்ளை எவ்வளவு தான் அழுதாலும், முகந்திருப்பி ஓடினாலும், எவ்வாறாயினும் அறுவைசிகிச்சை செய்யப்பட்டுப் போகும்.
பல ஹதீஸ்களிலேயே நபி(ஸல்) அவர்களின் அருள்வாக்கு
”பிள்ளை ஏழு வயதை அடைந்ததும் அதனை தொழும்படி ஏவுங்கள், பத்து வயதை அடைந்தபின் தொழுகவில்லையானால் அடியுங்கள்”
என அறிவிக்கப்பட்டுள்ளது.
”தந்தையின் அடி பிள்ளைகளுக்கு எப்படிப்பட்டதென்றால் வயலுக்கு நீர் இறைப்பது போன்றதாகும்”
என்பது ஹஜ்ரத் லுக்மான் ஹகீம்(அலை) அவர்களின் ஞான மொழியாகும்.