நான் கைது செய்யப்படவில்லை.. சவூதி அரேபியாவில் நடந்த விசாரணை குறித்து அர்கம் நூராமித் வெளியிட்டுள்ள தகவல்

Sri Lanka Government Of Sri Lanka Saudi Arabia Crime
By Sajithra Jun 03, 2026 01:25 AM GMT

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித், சவூதி அரேபிய அதிகாரிகளினால் விசாரணையொன்றுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், தனது ஹஜ் பயணத்தின் போது சவூதி அரேபியாவில் விசாரணைகள் தொடர்பில் அவர் விளக்கமளித்துள்ளார். 

அவர், "புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் செயல்படும் முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் நூல் பரிசீலனைக்குழு உறுப்பினராக நான் வகித்த பங்கு தொடர்பாக ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், என்னை மினா பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

அங்கு அந்த முறைப்பாட்டுடன் தொடர்புடைய சில விடயங்கள் குறித்து என்னிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த செயல்முறையின் போது, சவூதி அரேபியா இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவர் மேதகு அமீர் அஜ்வாத், ஜித்தாவிற்கான இலங்கைத் துணைத் தூதர் ஓய்வு பெற்ற நீதிபதி எம். எம். லஃபார் தாஹிர் உடன் இணைந்து, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் முனீர் முலஃபரின் ஆலோசனையின் பேரில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும், சவூதி அரேபியாவின் இஸ்லாமிய அலுவல்கள் அமைச்சின் அதிகாரிகளிடமும் சில தகவல்களை வழங்குமாறு என்னிடம் கோரப்பட்டது. துரதிருஷ்டவசமாக, இந்த வழக்கமான செயல்முறைகள் பலவிதமான வதந்திகளுக்கும் ஊகங்களுக்கும் வழிவகுத்தன.

அவற்றில் பல உண்மைக்குப் புறம்பானவையாக இருந்தன. நான் சவூதி அரேபியாவில் தங்கியிருந்த காலப்பகுதியில் எந்த நிலையிலும் நான் கைது செய்யப்படவோ, தடுத்து வைக்கப்படவோ இல்லை என்பதையும், சவூதி அதிகாரிகளால் எனது கடவுச்சீட்டு எப்போதும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதையும் தெளிவாக வலியுறுத்த விரும்புகிறேன்.

அல்லாஹ்வின் அருளால், சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சின் ஆலோசனையுடனும், மேதகு அமீர் அஜ்வாத்தின் ஒத்துழைப்புடனும், நான் 2026 மே 31ஆம் திகதி பாதுகாப்பாக இலங்கைக்கு திரும்பினேன். இந்த முழு காலப்பகுதியிலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) அமைப்பு விரைவாகவும் பொறுப்புடனும் செயல்பட்டது.

ACJU உறுப்பினர்கள் நேரடியாக இலங்கை பிரதமர் அலுவலகத்துடன் தொடர்புகொண்டு, எனது பாதுகாப்பு மற்றும் நலன் தொடர்பான கவலைகளை எடுத்துரைத்தனர்.

அதோடு, வெளியுறவு அமைச்சுடனும் தொடர்பு கொண்டு, பதில் வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவை சந்தித்து தேவையான அனைத்து இராஜதந்திர உதவிகளும் வழங்கப்படுவதை உறுதி செய்தனர்” என குறிப்பிட்டுள்ளார்.