சாப்பிட அமரும் முறை குறித்து நபிகளாரின் வழிகாட்டல்
”நான் சாய்ந்தபடி சாப்பிடமாட்டேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
”நான் ஓர் அடிமையைப் போல் அமர்வேன். ஓர் அடிமை சாப்பிடுவதை போல் சாப்பிடுவேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இத்திகாஉ
”இத்திகாஉ” எனும் அரபுச் சொல்லுக்கு விளக்கமாக பல்வேறு பொருட்கள் கூறப்பட்டுள்ளன.
1. சம்மணமிட்டு அமர்தல்
2.ஏதாவது ஒன்றில் சாய்ந்தவாறு அமர்தல்
3.விலாப்புறத்தில் சாய்ந்தவாறு அமர்தல்.

இவை மூன்றுமே ”இத்திகாஉ” எனும் பதத்திற்குள் அடங்கும். இம்மூன்றில் ஒன்றான “விலாப்புறத்தில் சாய்ந்தவாறு அமர்தல்” சாப்பிடுவதற்கு இடையூறாக அமையும்.
ஏனென்றால் அவ்வாறு அமர்வதால் இயல்பான முறையில் உணவுக்குழாய்க்கு உணவு செல்வது தடைபடும்.
உணவானது இரைப்பைக்குள் விரைவாக செல்ல சிரமமாக இருக்கும். மேலும் அது இரைப்பையை அழுத்தும். அத்தோடு இரைப்பை சாய்ந்து கிடக்கும், நேராக இருக்காது, எனவே உணவு எளிதாக இரைப்பைக்குள் செல்லாது.
சம்மணமிட்டு அமர்தல், ஏதாவது ஒன்றில் சாய்ந்தவாறு அமர்தல் ஆகிய இவ்விரண்டு முறையும் அடக்குமுறையாளர்களின் அமர்தல் ஆகும். இவை ஓர் அடிமைக்கு எதிரான அமர்தல் முறையாகும்.
இதனால் தான் ”நான் ஓர் அடிமை சாப்பிடுவதை போல் சாப்பிடுவேன்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஒரு மனிதன் உண்பதில் மிகவும் நேர்த்தியானது அவரது உடலுறுப்புகள் சீராக இருப்பதில்தான் உள்ளது.

அத்தகையை நிலை, ஆசன உறுப்பை தரையில் படுமாறு வைத்து கால்கள் இரண்டையும் தலையில் ஊன்றி நிறுத்தியவாறு அமர்ந்து சாப்பிடுவதில் தான் உள்ளது, மிக மோசமான அமர்தல் என்பது விலாப்புறத்தில் சாய்ந்தவாறு அமர்தல் ஆகும்.
ஏனென்றால் அவ்வாறு அமர்வதால் இரைப்பைக்குள் உணவு செல்வதில் மிகுந்த நெருக்கடி ஏற்படுகிறது.
மூன்று விரல்களில் உண்ணுதல்
மேலும் நபி(ஸல்) அவர்கள் தம் மூன்று விரல்களில் உண்பவர்களாக இருந்தார்கள். உணவுக் கவளங்களை எடுத்து உண்பதில் இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
அதே நேரத்தில் ஒரு விரலால் அல்லது இரண்டு விரல்களால் உண்பதில் எந்த இனிமையும் இருக்காது. நீண்டநெடிய நேரத்திற்கு பின்னர்தான் வயிறு நிறையும்.
இவ்வாறு உண்பதால் முழுமையான திருப்தி ஏற்படாது. அதேநேரத்தில் ஐந்து விரல்களால் சாப்பிடுவது உணவில் நெருக்கடியை உண்டுபண்ணும்.
இரைப்பைக்கும் சிரமம், ஆகவே தான் நபி(ஸல்) அவர்கள் உண்டுகாட்டிய முறையை நபித்தோழர்களும் கடைப்பிடித்தார்கள்.
