உயர் நீதிமன்றம் அநுர - ஹரிணிக்கு அறிக்கை

Anura Kumara Dissanayaka Wimal Weerawansa Harini Amarasuriya
By Dharu Aug 27, 2025 08:37 AM GMT
Dharu

Dharu

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (MoU) செல்லாததாக்க தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்த இரண்டு மனுக்களை பரிசீலனைக்கு அழைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனுக்களில் ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் உள்ளிட்ட அமைச்சரவை பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பலர் தாக்கல் செய்த இரண்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள்

இதன்படி ஒக்டோபர் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்க நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.

இந்த மனுக்கள் இன்று பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, நீதியரசர் குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ள அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட பிரதிவாதிகளுக்கு எந்த அறிவிப்புகளும் கிடைக்கவில்லை என்று சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எனினும்ஈ மனுதாரர்களில் ஒருவரின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கனிஷ்க விதாரண, இந்த வழக்கை பரிசீலிக்க விரைவான திகதியை வழங்குமாறு கோரினார்.

அதன்படி, பிரதிவாதிகளுக்கு மேலும் அறிக்கை அனுப்புமாறு மனுதாரர் தரப்பு சட்டத்தரணிகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பரிசீலனைக்கு அழைப்பு

பின்னர், மனுவை ஒக்டோபர் 17 ஆம் திகதி பரிசீலனைக்கு அழைக்குமாறு நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

இலங்கை மக்களுக்கு டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக ஜனவரி 27 மற்றும் ஜூன் 2 ஆகிய திகதிகளில் இரண்டு அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், இந்த அமைச்சரவை முடிவுகள் பொதுமக்களுக்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ தெரிவிக்காமல் எடுக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசு 2022 ஆம் ஆண்டு இந்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், இந்த இரண்டு அமைச்சரவை முடிவுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய எடுக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.