ஹஜ் யாத்திரீகர்களுக்கு சவூதி விடுத்துள்ள அறிவிப்பு
2026ம் ஆண்டு ஹஜ் காலத்தில் மக்கா மற்றும் மதீனாவில் ஹஜ் யாத்திரீகர்களுக்கான தங்குமிடங்களுக்கு புதிய உரிம முறையை அந்நாட்டு ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்துள்ளது.
சுற்றுலா அமைச்சகம் மற்றும் நகராட்சிகள் மற்றும் வீட்டுவசதி அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட தற்காலிக விடுதி உரிம சேவை மூலம் இனி உரிமங்கள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் ஹஜ் யாத்திரீகர்களுக்கான தங்குமிடங்களை குத்தகைக்கு எடுக்க தகுதி பெற, Nusuk Masar தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப, அந்நாட்டு சுற்றுலா அமைச்சகத்தின் மின்னணு தளம் மூலம் பெப்ரவரி முதலாம் திகதிக்கு முன்னர் உரிமங்களைப் பெற வேண்டும் என்றும் வருடந்தோறும் உரிமங்களை வைத்திருக்கும் ஹோட்டல்களுக்கு இந்த செயல்முறை பொருந்தாது என்றும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்காலிக விடுதி உரிம முறை நோக்கம்
இந்த தற்காலிக விடுதி உரிம முறை, சேவைத் தரத்தை உயர்த்துவதையும், முன்பதிவுகளை ஒழுங்குபடுத்துவதையும், மக்கா மற்றும் மதீனாவில் உள்ள புனித தலங்களில் ஹஜ் அனுபவத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.