லலித் குகன் வழக்கில் கோட்டாபயவிற்கு யாழ் நீதிமன்றம் வழங்கியுள்ள அனுமதி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி (Video Link) தொழில்நுட்பம் ஊடாக தொலைவிலிருந்து சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில் இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த இரு ஆர்வலர்களும் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டனர்.

இது தொடர்பாக அவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.
இச்சம்பவம் நடந்த காலகட்டத்தில் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றிய கோட்டாபய ராஜபக்சவுக்கு, இந்த விசாரணைக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கடந்த 2019 செப்டம்பர் 27 அன்று யாழ்ப்பாணம் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்திருந்தது.
முன்னதாக, தான் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக கோட்டாபய ராஜபக்ச உச்ச நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தார்.
எனினும், பின்னர் சில "பாதுகாப்பு காரணங்களைக்" குறிப்பிட்டு, நிகழ்நிலை தொழில்நுட்பம் மூலம் சாட்சியமளிக்க அவர் அனுமதி கோரியிருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறிய அவரது தரப்பு சட்டத்தரணிகள், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, இவ்வாறான கோரிக்கைகளை முறையாக சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில், தற்போது நீதிமன்றம் வழங்கியுள்ள புதிய உத்தரவின்படி, கோட்டாபய ராஜபக்ச தொலைவில் இருந்தே காணொளி மூலம் சாட்சியமளிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதியின் மூலம், நீண்ட காலமாக இழுபறியில் இருந்த இந்த முக்கிய காணாமல் ஆக்கல் வழக்கு விசாரணை அடுத்த கட்டத்திற்கு நகர வழிவகை செய்யப்பட்டுள்ளது.