சூடுபிடிக்கும் ஞானசார தேரர் விவகாரம் - விடுதலை தொடர்பில் அரசாங்க தரப்பிலிருந்து வெளியான அறிவி்ப்பு
ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி தேரர்களினால் எதிர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றும் யாருக்கும் சிறப்புரிமைகளை வழங்க அரசாங்கம் தயாராக இல்லை என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ள்ளார்.
கொழும்பில் (16) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தின் பதில்
நாட்டில் எந்தவொரு நபரின் தகுதியோ அல்லது பதவி நிலைகளோ பொருட்படுத்தாமல், சட்டம் அனைவருக்கும் நியாயமாகவும் சமமாகவும் செயற்படுத்தப்படும். குறிப்பிட்ட ஒரு நபரை இலக்குவைத்துச் சட்டத்தை வளைப்பதையோ அல்லது செயற்படுத்தாமல் விடுவதையோ மக்கள் எமது அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை.
அக்டோபர் 10 அன்று கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு அருகில் தொடங்கிய ‘துறவறத்திற்கான நீதி – விடுதலைப் பேரணி’ தற்போது கொழும்பை மையமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஞானசாரரை விடுதலை செய்யக்கோரும் இந்த துறவிகள், அரசாங்கத்திடமிருந்து உறுதியான பதிலுக்காகக் காத்திருந்து, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு வந்து இரவு முழுவதும் அங்கேயே தங்கியிருந்தனர்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட இடத்தில் போராட்டங்களுக்குத் தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், போராட்டக்காரர்கள் தங்களது தற்காலிகக் கூடாரங்களைக் காலி செய்ய நிர்பந்திக்கப்பட்டனர்.
இதன்பின்னர் அவர்கள் புத்தசாசன அமைச்சகத்திற்குச் சென்றனர், அங்கு அரசாங்கத்துடன் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.
தேரர்களின் கோரிக்கைகளுக்கு நேரடி பதில்
இந்நிலையில், அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, தேரர்களின் கோரிக்கைகளுக்கு நேரடியாக பதிலளித்துள்ளார்.
கடந்த கால ஆட்சிகளின் போது, சட்டம் பொதுமக்களுக்கு ஒரு விதமாகவும், அரசியல் அதிகாரம் அல்லது செல்வாக்குள்ள பதவிகளை வகிப்பவர்களுக்கு மற்றொரு விதமாகவும் எவ்வாறு செயல்படுத்தப்பட்டது என்பதை மக்கள் அனுபவித்திருக்கிறார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய ஆட்சிகளின் கீழ் சட்டம் சமமற்ற முறையில் செயல்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட பொதுமக்களின் கடும் அதிருப்தியே, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வெற்றிக்கும், தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றதற்கும் முக்கிய காரணம் என்பதை அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
இத்தகைய பாகுபாட்டு நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவந்து, சட்டத்தை அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது என்றும், இது அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களின் மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களின் பொதுவான விருப்பம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட பிக்குவுக்கு வழங்கப்பட்ட சிறைத் தண்டனை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது என்றும், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய தனிநபர்களுக்கு உரிமை இருந்தாலும், இந்தச் சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே முடிவடைந்துவிட்டன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதால், ஒரு நபரின் குறிப்பிட்ட அடையாளம் அல்லது சமூக அந்தஸ்தின் அடிப்படையில் அவருக்குச் சிறப்புச் சலுகை வழங்க முடியாது.
ஒரு தனிநபரின் நலனுக்காக நடைமுறையில் உள்ள சட்டத்தை மாற்றவோ அல்லது திருத்தவோ பொதுமக்கள் எதிர்பார்க்கவில்லை என்றும், அனைத்து அரசாங்க முடிவுகளும் சட்ட நடைமுறைகளுக்கு இணங்கவே எடுக்கப்படுகின்றன என்றும் அமைச்சர் விளக்கியுள்ளார்.
அரசாங்கம் தனது சட்ட நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திய போதிலும், பௌத்த பிக்குகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பௌத்த கல்வி அமைச்சகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட பிக்கு பிரதிநிதிகள், ஞானசாரர் விடுவிக்கப்படும் வரை விகாரமகாதேவி பூங்காவிலேயே தங்கியிருப்போம் என்று கூறியுள்ளனர்.