ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் களத்தில் இணையும் ஜெர்மனி

United States of America Iran Germany Israel-Iran conflict
By Shehan Mar 02, 2026 10:10 AM GMT

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல் நகர்வில் இணைவது குறித்து ஜெர்மனி தீவிரமாக பரிசீலித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலின் இராணுவ வானொலிக்கு ஜெர்மன் அரசியல் மற்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்பதை மேற்கோள் காட்டி குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

மத்திய கிழக்கில் இடம்பெற்றுவரும் மோதலுக்கு மத்தியில் பிராந்தியத்தில் உள்ள நாடுகளைத் தாக்குவதை ஈரான் அரசாங்கம் நிறுத்தாவிட்டால், இந்த தாக்குதலில் இணைவது குறித்து ஜெர்மனி தீவிரமாக பரிசீலித்து வருவதாக குறித்த செய்தியில் விவரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் சாத்தியமான இராணுவ நடவடிக்கைக்கான திட்டமிடல் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் இணைவது முதல் இராணுவ மற்றும் வான்வழி உதவிகளை வழங்குவது வரை, ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகளும், நாடாளுமன்றத்தின் வெளியுறவுக் குழு உறுப்பினர்களும் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த அறிக்கை குறித்து இஸ்ரேலில் உள்ள ஜெர்மன் தூதரகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

இறுதியாக நேற்றிரவு, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரித்தானியா ஆகியவை ஈரானின் தாக்குதல்களைக் கண்டித்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டன. தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக "தற்காப்பு நடவடிக்கை" எடுப்பதன் மூலம் தங்கள் நலன்களையும் வளைகுடாவில் உள்ள தங்கள் நட்பு நாடுகளின் நலன்களையும் பாதுகாக்கத் தயாராக இருப்பதாக எச்சரித்தன.