குடிநீர் போத்தல் அதிக விலைக்கு விற்பனை - உணவகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம்

Sri Lanka Money Water
By Mayuri Oct 01, 2026 11:45 AM GMT

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றுக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச சில்லறை விலையை மீறி குடிநீர் போத்தலை விற்பனை செய்தமைக்காக இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

கொழும்பு - 04, காலி வீதியில் அமைந்துள்ள குறித்த நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.

குற்றச்சாட்டை குறித்த நிறுவனம் ஒப்புக்கொண்டதையடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை

குடிநீர் போத்தல் அதிக விலைக்கு விற்பனை - உணவகத்திற்கு விதிக்கப்பட்ட அபராதம் | Fine On Restaurant For Selling Drinking Water   

2492/29 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் உள்ள 96ஆம் இலக்க உத்தரவின்படி, 500 மில்லிலீட்டர் முதல் 999 மில்லிலீட்டர் வரையான போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை 80 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், குறித்த உணவகம் 500 மில்லிலீட்டர் தண்ணீர் போத்தலை 100 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை வழக்குத் தொடர்ந்திருந்தது.

அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள குடிநீர் போத்தலை உணவகங்கள் அல்லது விடுதிகள் உட்பட எந்தவொரு வர்த்தக நிலையத்திலும் அந்த விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்ய முடியாது என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.