துபாய் பரிவர்த்தனை வழியாக 12 கோடி ரூபா லஞ்சம் – முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும் சிக்கல்

Dr Wijeyadasa Rajapakshe Dubai Sri Lankan political crisis
By Vinoja Jun 26, 2026 05:38 PM GMT

பாதாள உலகக்கும்பல் தலைவரான ஹரக் கட்டா என்றழைக்கப்படும் நந்துன் சிந்தகவின் மனைவியிடம் 12 கோடி ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்ட சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் நிலைமை இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை தகவல்களின் படி, ஹரக் கட்டாவின் மனைவி மதுஷிகா மதுவந்தியிடமிருந்து இந்த பணம் இலங்கை ரூபாயாகவோ அல்லது வங்கி கணக்குகளிலோ பெறப்படாமல், ஐக்கிய அரபு இராச்சிய நாணயமான திர்ஹம்களில் பெறப்பட்டுள்ளது.

துபாய் பரிவர்த்தனை வழியாக 12 கோடி ரூபா லஞ்சம் – முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கும் சிக்கல் | Ex Minister Wijeyadasa Rajapakshe Arrives Bribery

 500 மில்லியன் ரூபா கோரிக்கை

இந்த பரிவர்த்தனை துபாயில் வசிக்கும் நிர்மல பண்டாரா (ஹெர்பி) என்பவர் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய சட்டத்தரணி ரகித ராஜபக்ச, சரித் அபேசிங்க, வருண ஹென்த்றிகே ஆகியோர் 2023 மார்ச் 23 அன்று துபாய்க்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்கள் ஹரக் கட்டாவின் மனைவி மற்றும் தடுப்புக் காவலில் உள்ள மிதிகம ருவன் ஆகியோரை சந்தித்து, ஆரம்பத்தில் 500 மில்லியன் ரூபா லஞ்சமாக கோரியுள்ளனர்.

பின்னர் பேச்சுவார்த்தைகளின் மூலம் அது 300 மில்லியனாகவும், இறுதியில் 200 மில்லியன் ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

இதில் 12 கோடி ரூபா முன்பணமாக திர்ஹம்களில் வழங்கப்பட்டதாகவும், அது இரண்டு கட்டங்களாக பெறப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த லஞ்சத்தின் நோக்கம் ஹரக் கட்டாவை கொல்லப்படுவதிலிருந்து காப்பது, அவரின் தடுப்புக் காவலை நீக்குவது, பூசா உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து மாற்றுவது மற்றும் விசாரணையிலிருந்து விடுவிக்க ஏற்பாடுகள் செய்வது ஆகியவையாகும் என கூறப்படுகிறது.

மேலும், பெறப்பட்ட பணத்தை நாட்டிற்கு கொண்டு வர “உண்டியல்” முறையை பயன்படுத்தியதாக லஞ்ச ஆணைக்குழு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மூன்று நபர்களும் 2023 மார்ச் 29 அன்று ஒரே விமானத்தில் இலங்கைக்கு திரும்பியுள்ளனர்.

அதே பயணத்தில் முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும் இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.