பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – அப்துல்லாஹ்
பயங்கரவாத தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என மாநகரசபை உறுப்பினர் என்.எம். அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாத மாநகரசபை மாதாந்தக் கூட்டத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சொல்லிசை பாடகர் சங்கீத்சன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து உரையாற்றியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.

மக்கள் அழுத்தம் அவசியம்
பயங்கரவாத தடைச் சட்டம் மனித உரிமைகளுக்கு எதிரானதாகவும், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளை கட்டுப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சங்கீத்சன் கைது செய்யப்பட்டதை வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களும் யாழ்ப்பாண முஸ்லிம் சமூகமும் சார்பில் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.
மேலும், இவ்வாறான கைது நடவடிக்கைகள் இனி இடம்பெறாதவாறு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவதற்காக சர்வதேச சமூகம், அரசியல் கட்சிகள், சிவில் சமூகங்கள் மற்றும் மக்கள் இணைந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அத்துடன், இந்தச் சட்டம் தமிழ் பேசும் மக்களுக்கு மட்டுமன்றி ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இனம், மதம், மொழி, கட்சி வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் ஒன்றிணைந்து இச்சட்டத்தை நீக்கக் கோர வேண்டும் என்றார்.