அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க கலந்துரையாடல்
இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, மருந்து விலைகளைக் குறைக்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதற்கான அரசாங்கத்தின் ஆயத்தம் குறித்து சுகாதார அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கம், மருந்து முதலீட்டு சபை, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு உள்ளிட்ட மருந்துக இறக்குமதி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து பிரதிநிதிகளும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
அத்தியாவசிய மருந்துகள்
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மருந்துகளின் விலைகளைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தையும், பற்றாக்குறை இல்லாமல் மருந்துகள் விநியோகத்தை உறுதி செய்வதன் அவசியத்தையும் சுகாதார அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார்.
செலவு, காப்பீடு மற்றும் விநியோக மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அதிகபட்ச சில்லறை விலையை 80 சதவீதமாக வழங்கினால் மட்டுமே மொத்த விற்பனையாளர்களுக்கு 18 சதவீத இலாபம் ஈட்ட முடியும் என்று தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் விலைக் குழு வலியுறுத்தியுள்ளது.
அதன்படி, விலை நிர்ணய சூத்திரத்தைப் பயன்படுத்துவதன் மூலம், பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல மருந்துகளின் தற்போதைய விலைகள் மற்றும் விலைக் குறைப்புக்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மருந்து முதலீட்டு சபைக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |