வாக்குறுதிகளை வழங்குவதில் வள்ளல் ஹக்கீம்! முன்னாள் தவிசாளர் எம்.சி. கபூர் விமர்சனம்
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் வாக்குறுதிகள் வழங்குவதில் ஒரு வள்ளல் என்று ஏறாவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.சி. கபூர் விமர்சித்துள்ளார்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஜனநாயக ஐக்கிய முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் ஒன்று ஏறாவூரில் அமைந்துள்ள ஜனநாயக ஐக்கிய முன்னணி கிழக்கு மாகாண தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
கட்சி
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கிழக்கு மாகாணத்தில் ஏனைய தேசியக் கட்சிகளை விட ஒருகாலத்தில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆழமாக வேரூன்றி இருந்தது. மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் பின்னர், இடையில் கட்சியின் செல்வாக்கு சரிந்திருந்த போதும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் அவர்களின் வருகை கட்சியை மீண்டும் பலப்படுத்தியது.
ஆனால் இப்போது அந்தக் கட்சி திரும்பவும் அழிவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது. அதற்கான காரணம் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்தான்.
ரவூப் ஹக்கீமைப் பொறுத்தவரை நிறைவேற்ற முடியாத , நடைமுறைச்சாத்தியமற்ற வாக்குறுதிகளை அள்ளி வழங்குவதில் வள்ளல் குணம் கொண்டவர். வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமே என்ற எண்ணம் சிறிதளவும் இல்லாதவர்.
அது மாத்திரமன்றி பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களின் காலத்தில் ஒரே மாகாணமாக ஒன்றுபட்டுக் கிடந்த கிழக்கு மாகாண முஸ்லிம்களை இன்று பிரதேச ரீதியாக பிரிந்து நிற்கவைத்தவரும் ரவூப் ஹக்கீம் தான்.அவரது பிரித்தாளும் தந்திரம் தான் இன்று கிழக்கு முஸ்லிம்கள் ஒற்றுமையைத் தொலைத்துவிட்டு, அரசியல் உரிமைகளைப் பறிகொடுக்கக் காரணமாக அமைந்துள்ளது.
ரவூப் ஹக்கீம் கட்சியின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டபின்னர் முஸ்லிம்களின் எந்தவொரு உரிமையையும் அவர் பெற்றுத் தரவில்லை. இருந்த உரிமைகளையும் பறிகொடுத்து விட்டு இப்போது தவிக்கும் நிலையில் நாங்கள் இருக்கின்றோம்.
உரிமை
அது மாத்திரமன்றி எஞ்சியிருக்கும் உரிமைகளை பறிகொடுக்கும் நிலைக்கும் எங்களைத் தள்ளியதும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான். அந்த நிலையில் ஒரு மாற்றம் தேவை என்பதற்காகவே நாங்கள் இம்முறை ஜனநாயக ஐக்கிய முன்னணியில் களமிறங்கியுள்ளோம்.
கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து, நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய, அபிவிருத்திப் பணிகளை ஒற்றுமையுடன் முன்னெடுக்க்க் கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்குவது எங்கள் நோக்கமாகும். அதற்கான பயணம் நீண்டதாக இருந்தாலும், அதனை அடைந்து கொள்ள முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்குள் உண்டு.
தேசத்தின் மாற்றத்தில் அரசியல் மாற்றம் முக்கியமானது. அதற்கான பங்களிப்பை வழங்க நினைக்கும் பொதுமக்கள் எங்களை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு என்றும் வேட்பாளர் எம்.சி. கபூர் தொடர்ந்தும் தெரிவித்தார்.