மலையகத் தொழிலாளரின் ஊழியர் சேமலாப நிதி வைப்புச் செய்வதில் சிக்கல்

Sri Lanka Economic Crisis Government Of Sri Lanka Economy of Sri Lanka
By Fathima Jul 13, 2023 05:25 AM GMT
Fathima

Fathima

போதிய தரவுகள் இன்மையால் உரிய கணக்குகளில் வைப்புச் செய்ய முடியாது மலையகத் தொழிலாளர் சேமலாப நிதியில் 70 கோடி ரூபா தேங்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தோட்டத் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் வழங்கிய தகவலில் உள்ள முரண்பாடுகள் காரணமாக சுமார் 70 கோடி ரூபா அளவிலான தொகையை தொழிலாளர்களின் கணக்குகளில் வைப்புச் செய்ய முடியாமல் உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறை மேற்பார்வை நாடாளுமன்றக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, பல பெருந்தோட்டக் கம்பனிகள் ஊழியர் சேமலாப நிதியத்திற்கான கொடுப்பனவுகளை செலுத்த தவறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குழு தெரிவித்துள்ளது.

ஊழியர்களின் சேமலாப வைப்பு நிதி

மலையகத் தொழிலாளரின் ஊழியர் சேமலாப நிதி வைப்புச் செய்வதில் சிக்கல் | Epf Etf Funds Sri Lanka People

சில நிறுவனங்கள் ஊழியர்களின் சேமலாப வைப்பு நிதிக்கு பெரும் தொகை நிலுவைத் தொகையை செலுத்த வேண்டியிருப்பதாகவும் குழு குறிப்பிடுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் கூடிய போது இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்குழுவின் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி அவர்கள், தொழிலாளர்களைப் பாதுகாத்து, தொழிலாளர் சேமலாப வைப்பு நிதி மற்றும் தற்போதைய மாதாந்திர கொடுப்பனவுகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், தேசிய அடையாள அட்டை இலக்கத்தின்படி கணக்குகளை ஆரம்பிப்பதன் மூலம் ஒரே நபருக்கு பல கணக்குகளை வைத்திருக்கும் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் எனவும், இது தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்படுமாறும் குழு அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.