சம்மாந்துறையில் அதிகரித்துள்ள யானைகள் நடமாட்டம்
சம்மாந்துறை(Sammanthurai) பிரதேசத்திலுள்ள வயல்வெளிகளில் நடமாடுகின்ற யானைக் கூட்டத்தை அகற்றும் நடவடிக்கைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வேளாண்மை நடவடிக்கைகளுக்காக மீண்டும் உழவு வேலைகள் ஆரம்பித்துள்ள நிலையில், குறித்த யானைகளை காடுகளை நோக்கி திருப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 200க்கும் அதிகமான யானைகள் பட்டிபட்டியாக வருகை தருவதுடன் பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகளின் அட்டகாசம்
அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் கூட்டமாக ஊடுருவும் யானைகள் காய்க்கும் தென்னை மரங்கள் உட்பட பயன் தரும் மரங்கள், வீட்டுத் தோட்டங்கள், குடியிருப்புகள், வேலிகள் என்பவற்றை அழிக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நிந்தவூர், அம்பாறை, இறக்காமம், மத்திய முகாம் ஆகிய இடங்களில் யானைகளின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணம் காணப்படுகின்றன எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தினமும் அப்பகுதிக்கு வரும் யானை கூட்டத்தை மக்கள் பார்வையிட அலை மோதுவதுடன், இவ்வாறு பார்வையிட வரும் மக்களால், வயல்வெளிகளை நோக்கி வரும் யானைகள் ஊருக்குள் பிரவேசிக்க முடியாத வகையில் சத்தங்கள் எழுப்பி விரட்டப்படுகின்றன.
மேலும், இப்பிரதேசத்தில் அண்மையில் அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளை யானைகள் உண்ணுவதற்கு தினந்தோறும் வருகை தருகின்றன என தெரியவந்துள்ளது.
யானை - மனித மோதல்
அத்துடன், யானை - மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு தமது திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களில் நெல் அறுவடை முடிந்தாலும் யானைகளின் வருகை தொடர்கதையாகவே உள்ளது. எனினும் வேளாண்மை செய்கை மீண்டும் ஆரம்பமாகியுள்ளமையினால் காடுகளை நோக்கி திருப்பும் நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களில் உள்ள வைக்கோல்களுக்கு தீ வைப்பதனால் குறித்த யானைகள் ஊருக்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













