தீவிரமடையும் யானை -மனித மோதல்! தடுக்க பல்வேறு நடவடிக்கை
யானை – மனித மோதலைத் தடுப்பதற்காக அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கடந்த சில தினங்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
அம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் தொல்லையினால் மக்கள் உயிரிழப்புடன் பெறுமதியான சொத்துக்களையும்,உடமைகளையும் இழந்து வருகின்றனர்.
இந்த வகையில் காட்டு யானைகளின் தொல்லையிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக உரிய பொறிமுறைகளை ஏற்படுத்துவதற்கான தீர்மானங்கள் பொத்துவில், நிந்தவுர், சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, காரைதீவு ஆகிய பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்டிருந்தது.
அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை
இந்தத் தீர்மானங்களுக்கமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகத்தை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் விரைந்து எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வனஜீவராசிகள் திணைக்களம் பொறுப்புடன் செயல்படுவதாகவும், ஆளனிப்பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதன் காரணமாகவே சில பிரச்சினைகளை ஏதிர்நோக்குவதாகவும் குறிப்பிட்ட பணிப்பாளர் நாயகம் அம்பாறை மாவட்டத்தில் யானை – மனித மோதலைத் தடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் தலைமையில் வனஜீவராசிகள் அதிகாரிகளைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து அங்கு கள விஜயம் செய்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் பணிப்பாளர் நாயகம் இங்கு மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களை விட யானை வெடில் குறைந்தளவான தொகையே இப்போது பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கின்றது. எனவே, அம்பாறை மாவட்டத்திற்கு கூடுதலான யானை வெடில்களை வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் கேட்டுக்கொண்டார். இதற்கு உடனடியாக ஆவண செய்வதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் பொத்துவில் ஹிஜ்ரா நகர் பிரதேசத்தின் சிரியா, ஜெய்க்கா, ரொட்டை ஆகிய கிராமங்களில் மக்களின் உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பதற்காக யானை வேலிகளை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்து தருவதாகவும் பணிப்பாளர் இங்கு உறுதியளித்துள்ளார்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை
இதேவேளை,ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவைச் சந்தித்து மேற்படி விடயமாக நீண்ட கலந்துரையாடலை நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் மேற்கொண்டதுடன் வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் செயலாளரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
எஸ்.எம்.எம்.முஷாரபின் வேண்டுகோளை மிகவும் உன்னிப்பாகக் கேட்டறிந்து கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு போதுமான ஆளனியை உருவாக்க நடவடிக்கை எடுப்பதுடன் மக்கள் வாழ்கின்ற குடியிருப்புக் கிராமங்களின் எல்லைகளில் யானை வேலி அமைப்பதற்கான நிதியினை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் இங்கு தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள பல பிரதேசங்களில் அதிகரித்துள்ள காட்டு யானைகளின் தாக்குதல்களினால் மக்கள் உயிரச்சுறுத்தலுடன் தமது இரவு வேளைகளை தூக்கமின்றி பீதியுடன் கழித்து வருவதுடன் மக்களின் சொத்துக்கள், விவசாய உற்பத்திப் பயிர்களுக்கும் பெரும் நாசமும் நட்டமும் ஏற்பட்டு வருகின்றது.
சம்மாந்துறையில் இரண்டு குடும்பஸ்தர்கள் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதுடன், அறுவடை செய்யப்பட்டு எடுத்துச் செல்வதற்காக வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான நெல் மூடைகளை காட்டு யானைகள் நாசப்படுத்தியிருந்தது.
அதேபோன்று நிந்தவுர் பிரதேசத்தில் அறுவடைக்கு தயாராகவிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நெற் காணிகள் துவம்சம் செய்யப்பட்டிருந்தது. காரைதீவு, அட்டாளைச்சேனை அஸ்ரப் நகர், தீகவாபி பொத்துவில் பிரதேசத்தின் சிரியா, ஜெய்க்கா, ரொட்டை ஆகிய கிராமங்களிலும் யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்