போலி சுற்றறிக்கைகள் குறித்து கல்வி அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை!
சமூக வலைத்தளங்கள் மற்றும் மெசேஜிங் செயலிகள் மூலம் பரப்பப்படும் போலி மற்றும் மாற்றியமைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ சுற்றறிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.
அதிகாரப்பூர்வ சுற்றறிக்கைகள் திருத்தப்பட்டு இணைய வழியில் தவறான தகவல்கள் பரப்பப்படும் போக்கு அதிகரித்து வருவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
நம்பி ஏமாற வேண்டாம்
இது போன்ற தவறான தகவல்கள் ஆசிரியர்கள், அதிபர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால் அமைச்சு கவலை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், அமைச்சு வெளியிடும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்படும் சுற்றறிக்கைகளை மட்டுமே துல்லியமானதாகவும் செல்லுபடியாகும் ஒன்றாகவும் கருதுமாறு கோரப்பட்டுள்ளது.
எனவே, போலி சுற்றறிக்கைகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும், சமூக வலைத்தளங்களில் இவ்வாறான தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.