மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை மும்முரம் (Photos)
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொது சுகாதார வைத்திய பிரிவினரின் ஏற்பாட்டில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் விளையாட்டுக்கழக உறுப்பினர்களும் இணைந்து பல பகுதிகளிலும் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளதாக களுவாஞ்சிகுடி பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் கே.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் டெங்கு
பரிசோதனை நடவடிக்கைகள் இன்றைய தினம் (12.06.2023) முன்னெடுக்கப்பட்டிருந்தன.
நேரடி கள விஜயம்
இதன்போது பொது இடங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள், மக்கள் குடியிருப்புக்கள் என பல இடங்களிலும் மக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
டெங்கு பரவும் வகையில் சூழலை வைத்திருந்தவர்கள் இதன்போது அவ்விடங்களை உடன் துப்பரவு செய்யுமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மழை காலத்தில் எமது பகுதியிலும் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகம் காணப்படுவதனால் முற்கூட்டியே எமது பிரதேசத்தை டெங்கு நோய் அற்ற பிரதேசமாக மாற்றுவதற்காக வேண்டி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் பணிப்புரைக்கமைவாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மேற்பார்வையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் வழிகாட்டுதலின் பெயரில் இப்பிரதேசத்தில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கைகளை விளையாட்டுக் கழகங்கள், பிரதேச செயலக உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்களுடனும் இணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக களுவாஞ்சிகுடி பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் இதன்போது தெரிவித்துள்ளார்.