நாட்டில் டெங்கு பாதிப்பு தீவிரம்: ஒரே நாளில் 1,025 புதிய தொற்றாளர்கள் -35 பேர் உயிரிழப்பு
நாட்டில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி, டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

டெங்கு நோயாளிகள்
அறிக்கையின்படி, நேற்று (1) ஒரே நாளில் மட்டும் 1,025 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன் காரணமாக, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 56,422 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்கும் இடங்களை அகற்றுதல், கொசுப் பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ளுதல் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட டெங்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுதல் அவசியம் என சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.