மெட்ரோ பேருந்துகளைச் சேதப்படுத்துவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை - அமைச்சர் பிமல் ரத்நாயக்க
மெட்ரோ பேருந்துகளைச் சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேருந்துகளின் சாரதிகள் அல்லது உரிமையாளர்கள் என யாராக இருந்தாலும், இலங்கை மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தினால் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அமைச்சர், தற்போது சுமார் 100 மெட்ரோ பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பெரும்பாலான தனியார் பேருந்துகள் இச்சேவைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய போக்குவரத்துத் திட்டம்
ஒருசில தனியார் பேருந்துகளுடன் மட்டுமே சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது. இதனை ஒட்டுமொத்த தனியார் பேருந்து உரிமையாளர்களின் பிரச்சினையாகக் கருத முடியாது என்றும் கூறியுள்ளார்.

மேலும், பேருந்துகளைச் சேதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவற்றைக் கைவிட்டு, பொதுமக்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ள புதிய போக்குவரத்துத் திட்டத்துடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, மெட்ரோ பேருந்து சேவையை இன்னும் ஓராண்டுக்குள் தனியார் துறையினரின் பங்கேற்புடன் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.