மன்னிப்பு கேட்காவிட்டால் சஜித்துடன் பயணத்தை தொடர நான் தயார் இல்லை!- வடிவேல் சுரேஷ்

Sri Lanka
By Nafeel May 01, 2023 03:02 PM GMT
Nafeel

Nafeel

(ஹற்றன் நிருபர்) ” பதுளை, மடுல்சீமை மக்களிடம் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மன்னிப்புகோர வேண்டும். அவ்வாறு இல்லையேல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் பயணத்தை தொடர்வதற்கு நான் தயாரில்லை.” –

என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். தொழிலாள் தேசிய சங்கத்தின் மே தின கூட்டம் பதுளையில் இன்று (01.05.2023) நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமைதாங்கி உரையாற்றுகையிலேயே வடிவேல் சுரேஷ் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” நாட்டில் தேசிய கொள்கைத்திட்டம் பற்றி பேசப்படுகின்றது. அவ்வாறு கொள்கைத் திட்டங்கள் வகுக்கப்படும் போது மலையக பெருந்தோட்ட மக்கள் ஓரங்கட்டப்படுகின்றனர்.

இந்நிலைமையை இனியும் அனுமதிக்க முடியாது. எமது மக்களும் இலங்கை பிரஜைகள்தான். அவர்களுக்கு எதற்காக ஓரவஞ்சணை காட்டப்படுகின்றது?

இலங்கை மக்கள் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளும் எமது மக்களுக்கும் வேண்டும். எமது மக்கள் பயங்கரவாதிகள் அல்லர். பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவில்லை. நாட்டின் வன்முறைகளில் ஈடுபட்டதில்லை. நாடு மேம்பட உழைத்த அவர்களுக்கு ஏன் புறக்கணிப்பு?

இன்னும் காணி உரிமை அற்றவர்களாக வாழ்கின்றனர். எங்கள் மக்களுக்கு உண்ண உணவில்லை, பாதுகாப்பாக வாழ காணி இல்லை. மக்கள் இப்படி தவிக்கையில் எனக்கு கட்சி, சின்னம் என்பன முக்கியம் இல்லை. தற்போதைய சூழ்நிலைக்கமைய நாட்சம்பளமாக 3 ஆயிரத்து 250 ரூபா வழங்கப்பட வேண்டும். பேராதனை பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

எனவே, அந்த தொகையை வழங்குமாறு கம்பனிகளுக்கு ஜனாதிபதி கட்டளையிட வேண்டும். அதேவேளை, எமது மக்களை செல்லாக்காசாக கருத வேண்டாம் என எமது கட்சி தலைவர் சஜித்திடம் கூறுகின்றேன். அவர் மடுல்சீமை கூட்டத்துக்கு வரவில்லை. ஆக மடுல்சீமைக்கு வந்து அவர் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். இல்லையேல் சஜித்துடன் எனது பயணம் தொடராது.” – என்றார்.

GalleryGallery