நீர்கொழும்பு சிறைச்சாலை விவகாரம் தொடர்பில் வெளியான புலனாய்வு தகவல்.! மறுக்கும் சிறைச்சாலை ஆணையாளர்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக முன்கூட்டியே எந்தவிதமான புலனாய்வு தகவலும் கிடைக்கவில்லை என சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனினும், கைதிகளின் கலவரத்தைத் தடுக்கும் நோக்கில் அதிகாரிகள் முன்கூட்டியே பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், சேதத்தின் அளவையும் குறைக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர்கொழும்பு சிறை
இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) மாலை நிலைமை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும், கைதிகள் மீண்டும் தங்களது அறைகளுக்கு அனுப்பப்பட்டு, அவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (06) நீதிமன்ற விசாரணைக்காக கைதிகள் தயாராக்கப்பட்டபோது, சில கைதிகள் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது கண்டறியப்பட்டதாகவும், அதன் காரணமாக அவர்கள் போதை நிலையில் மோதல்களில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
போதைப்பொருளின் தாக்கத்தால் இயல்பிழந்திருந்த கைதிகளை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் தங்களது உயிரையே பணயம் வைத்து செயல்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் பெண் கைதிகளும் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
உளவுத் தகவல்
இதேவேளை, அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் மற்றும் மூத்த சட்டத்தரணி ஒருவர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், நீர்கொழும்பு பொலிஸார், கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு (CCD), குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் சிறைச்சாலை திணைக்களம் ஆகியனவும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து விசாரணை அறிக்கைகளும் கிடைத்த பின்னர் இந்தச் சம்பவத்தின் முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வரும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்ததுடன், இந்த வன்முறைச் சம்பவத்துக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.