கிழக்கு நோக்கி நகரும் தாழ்வு மையம் : மக்களுக்கான எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று(25) தாழமுக்கமாக வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே இது குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், இந்த தாழ்வு மண்டலமானது இன்று(25) காலை மட்டக்களப்பிற்கு நகரும் எனவும், தென்கிழக்கில் சுமார் 500 கி.மீ தொலைவில் நிலைக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கிற்கு நகரும் தாழ்வு மண்டலம்
இதன் காரணமாகக் கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடுமென எதிர்வு கூறியுள்ளது.
இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து நாட்டின் கிழக்கு கடற்கரைக்கு அருகில் செல்லும் என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேகங்களுடன் கனமாக இருக்கலாம்.
தொடர்ந்தும் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இதேவேளை, மறு அறிவித்தல் வரை மன்னார் முதல் காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களுக்கு செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கடற் கொந்தளிப்பு
இங்கு மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் எதிர்பார்க்ப்படுகின்றது.
மேலும் மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடலானது இடைக்கிடையே கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |