திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் விஷேட செயற்திட்டம்
கிளீன் ஸ்ரீலங்கா(Clean Sri Lanka) என்னும் தொனிப் பொருளில் திருகோணமலை நகரை தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் திருகோணமலை நகராட்சி மன்ற செயலாளர் தே.ஜெயவிஷ்ணுவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இதன்படி, 2025ம் ஆண்டு தை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் நகராட்சி மன்றம் தனது சேவையை விஸ்தரிக்கும் முகமாக விஷேட பணிக்குழு (Revenu, Disaster and Development Task force) ஊடாக மேற்பார்வை செய்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக, நேற்று(08) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சுகாதார வைத்திய அதிகாரி விஜயகுமார் தலைமையில், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நகராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விஷேட கள விஜயத்தில் பழுதடைந்த மீன்கள் மற்றும் கருவாடுகள் கைப்பற்றப்பட்டதுடன், வியாபார நிலையங்கள் முற்றுகையிடப்பட்டு அங்கிருந்து பாவனைக்குப் பொறுத்தமற்ற பொருட்களை அகற்ற உடன் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
தூய்மையாக்கல் திட்டம்
மேலும், இந்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக பேருந்து தரிப்பு நிலையங்களை சுத்திகரித்து இருக்கைகள் மற்றும் கைப்பிடி கம்பங்களை வர்ணம் பூசி புதுப்பொலிவுபடுத்தியதுடன், மின்விளக்கு உடனுக்குடன் முறைப்பாடுகளுக்கமை பொருத்தப்படுவதுடன், திண்மக்கழிவுகள் அகற்றும் முறைமையில் சற்று வித்தியாசமாக ஒரு வலயத்திற்கு இரண்டு வாகனங்கள் அடிப்படையில் விஷேட திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்தி வெற்றிகண்டுள்ளனர்.
அத்துடன், குறிப்பிட்ட இந்த வேலைகளை ஊழியர்கள் இரவு, பகல் பார்க்காமல் செய்து வருகின்றதுடன், வீதிகளில் திரியும் கட்டாக்காலி மாடுகளையும் பிடிக்கின்ற வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |