சீமெந்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
நாட்டில் சீமெந்து உற்பத்தியை மேற்கொள்ளும் பல சீமெந்து நிறுவனங்கள், 50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து மூடையின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.
அதன்படி, 50 கிலோ சீமெந்து மூட்டையின் விலை 100 ரூபா வீதம் அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உற்பத்திச் செலவு வேகமாக அதிகரிப்பதே இந்த விலை அதிகரிப்புக்கான முக்கிய காரணம் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கட்டுமானப் பொருட்களின் விலைகள்
இந்தத் தீர்மானத்துடன், இதற்கு முன்னர் 2,100 ரூபா முதல் 2,250 ரூபா வரை காணப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து மூட்டையொன்றின் சில்லறை விலை, 2,200 ரூபா முதல் 2,350 ரூபா வரையிலான புதிய விலைக்கு விற்கப்படும்.

இந்த விலை அதிகரிப்பு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மற்றும் இறக்குமதி செய்யப்படும் சீமெந்து வகைகள் இரண்டிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வீடுகளை நிர்மாணிக்கும் பொதுமக்கள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் செலவுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் ஏற்கனவே கட்டுமானப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.