இலங்கையிலிருந்து உக்ரைனுக்கு சரக்கு விமான சேவை - இன்று முதல் ஆரம்பம்
உக்ரைனைச் சேர்ந்த Supernova Airlines LLC விமான நிறுவனத்திற்கு, போயிங் 737-800 (Boeing 737-800) ரக விமானங்களைப் பயன்படுத்தி இலங்கை - கொழும்புக்கு அட்டவணைப்படுத்தப்படாத சரக்கு விமான சேவைகளை முன்னெடுப்பதாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை (CAASL) அறிவித்துள்ளது.
இது தொடர்பான வெளிநாட்டு விமான இயக்கச் சான்றிதழை (Foreign Air Operator Certificate – FAOC) இன்று(20.10.2026) வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து விமான சேவை ஆரம்பம்
இந்தச் சான்றிதழை இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் சிவில் விமானப் போக்குவரத்து பணிப்பாளர் நாயகமும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கப்டன் தமிந்த ரம்புக்வெல்ல, Supernova Airlines LLC நிறுவனத்தின் பொறுப்பு முகாமையாளரான (Accountable Manager) டினேஷ் குணேஷ்குமாரனிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்துள்ளார்.
இந்த நிகழ்வில் விமான நிறுவனத்தின் பிரதிநிதிகளான பிரபாத் சமரதுங்க மற்றும் சார்லஸ் நிர்மலநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறைகளுக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகமான கப்டன் லசந்த தஹநாயக்கவும் நிகழ்வில் கலந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சான்றிதழ் வழங்கும் செயல்முறை, பொருந்தக்கூடிய தேசிய விமானப் போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) தரநிலைகள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் (Standards and Recommended Practices – SARPs) ஆகியவற்றுக்கமைவாக மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், விமான நிறுவனத்தின் செயல்பாட்டு, தொழில்நுட்ப மற்றும் நிறுவன ரீதியான திறன்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
வெளிநாட்டு விமான இயக்கச் சான்றிதழ்
Supernova Airlines நிறுவனத்திற்கு வெளிநாட்டு விமான இயக்கச் சான்றிதழ் வழங்கப்பட்டமை, உக்ரைனுக்கும் இலங்கைக்கும் இடையிலான அட்டவணைப்படுத்தப்படாத சரக்கு விமான சேவைகளை எளிதாக்குவதற்கான முக்கியமான படியாகவும் பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சேவைகள் சர்வதேச விமான சரக்குப் போக்குவரத்து இணைப்புகளை வலுப்படுத்துவதுடன், இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் தளவாடத் துறைகளின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையும், சிவில் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புத் தரங்களைப் பேணுவதையும் உறுதிப்படுத்தியவாறு, சர்வதேச விமானப் போக்குவரத்துச் சேவைகளை எளிதாக்குவதில் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.