தெஹிவளையில் சிவப்பு நிறமாக மாறிய கால்வாய் : வெளியான தகவல்
தெஹிவளை - கவுடானை பிரதேசத்தில் கால்வாய் நீரை சிவப்பு நிறமாக மாற்றிய குற்றத்திற்காக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வாரங்களில் கால்வாயில் இரசாயனம் கலந்துள்ளதால் கால்வாய் முழுவதும் சிவப்பு நிறமாக மாறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் பிரதேச மக்கள் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் பொலிஸ் சுற்றாடல் பிரிவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணை
கவுடானை பகுதியில் அத்திடிய கால்வாய் ஊடாக செல்லும் நீரில் சந்தேக நபர் ஒருவர் பெயின்ட் கலந்த காரணத்தினாலயே சிவப்பு நிறமாக மாறியுள்ளது என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து சிவப்பு நிற பெயின்ட் பீப்பாயை அகற்ற கிடைத்த உத்தரவிற்கமைய குறித்த பீப்பாய்களை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று வைத்திருந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அவை பொங்கியுள்ளன.
இந்நிலையில் குறித்த பெயின்டுகளை கால்வாயில் விடுவித்துள்ளதாக முதற்கட்ட விசாரணையின் போது பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிவப்பாக மாறிய கால்வாய்
இதன் காரணமாக கால்வாயில் சுமார் மூன்று நாட்களாக நீர் சிவப்பு நிறமாக காட்சியளித்தது என கூறப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்தே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது , சந்தேகநபருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டதுடன் நீதவான் அவரை கடுமையாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |