2019 ஆம் ஆண்டு பெறப்பட்ட சிம் கார்டுகள் தொடர்பில் அரசின் விசேட அறிவிப்பு
இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் விதிகளின்படி 2019 ஆம் ஆண்டு பெறப்பட்ட சிம் கார்டுகளின் தகவல்கள் மீள் பதிவு செய்யப்படவுள்ளதாக தெரிய வருகிறது.
அதாவது 2019 ஆகஸ்ட் இரண்டாம் (2019-08-02) திகதிக்கு முன்னர் பெறப்பட்ட சிம் கார்டுகள் தொடர்பான சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மீள் பதிவு செய்தல்
1991 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க இலங்கை தொலைத்தொடர்பு சட்டத்தின் விதிகளின்படி, 2019 ஆம் ஆண்டு 01 ஆம் இலக்க சிம் கார்ட் (சந்தாதாரர் அடையாள மொடியுல் - சிம் SIM) பதிவு விதிமுறைகள் 2019 ஆகஸ்ட் இரண்டாம் திகதி வெளியிடப்பட்டன, மேலும் அந்த திகதிக்குப் பின்னர் வழங்கப்பட்ட சிம் கார்டுகளுக்கு மட்டுமே இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று இது தொடர்பாக வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, 2019 ஆகஸ்ட் இரண்டாம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட சில சந்தாதாரர்களின் தகவல்கள் தொலைபேசி வலையமைப்பு நிறுவனங்களிடம் இல்லை.
இது சில சட்ட விசாரணைகளில் சிக்கலான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
மாற்றப்படவுள்ள சட்டத்திட்டங்கள்
மேலும், இது தொடர்பாக வெளியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தில், 16 முதல் 17 வயதுக்குட்பட்ட சந்தாதாரர்களைப் பதிவு செய்வதற்கும், நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கு சிம் கார்டுகளை வழங்குவதற்கும் புதிய விதி முறைகளை சேர்ப்பதன் மூலம் தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப விதிமுறைகளைத் திருத்த வேண்டியதன் அவசியமும் அடையாளம் காணப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, 2019 ஆகஸ்ட் இரண்டாம் திகதிக்கு முன்னர் பெறப்பட்ட சிம் கார்டுகள் தொடர்பான சந்தாதாரர் தகவல்களை மீண்டும் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை உருவாக்குவதன் மூலமும், தற்போதுள்ள சந்தாதாரர் (சந்தாதாரர் அடையாள தொகுதி - சிம் SIM)) பதிவு விதிமுறைகள் இலக்கம் 01 ஐப் பொருத்தமாகத் திருத்துவதன் மூலமும் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் என்ற முறையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.