பிரிட்டனின் யூத வழிபாட்டு தலத்தில் தாக்குதல் : இருவர் பலி
பிரிட்டனின் மான்செஸ்டர் நகரிலுள்ள ஒரு யூத வழிபாட்டு தலத்தில் நேற்று(02) நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் இரண்டு யூதர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
சிரிய வம்சாவளியும், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவருமான 35 வயது அல்-ஷாமி என்பவரே ஹீடன் பார்க் ஹீப்ரு என்ற யூத வழிபாட்டு தலத்துக்கு வெளியே மக்களை கத்தியால் குத்தியுள்ளார்.
கத்தி குத்து
அங்கிருந்த மக்கள் மீது அவர் தான் ஓட்டி வந்த காரை ஏற்றியுள்ளதுடன், பின்னர் குறித்த ஆலயத்தின் பாதுகாப்பு காவலரை கத்தியால் தாக்கியதன் பின்னரே ஏனையோரையும் தாக்கியுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் தாக்குலை நடத்திய நபரை சுட்டுக் கொன்றுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் மான்செஸ்டர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யூத நாட்காட்டியில் புனிதமான நாளான யோம் கிப்பூர் தினத்தில் நடந்த இந்த தாக்குதலை பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் கண்டித்துள்ளார்.
கோப்ரா குழு
இந்த தாக்குதலை அடுத்து பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையில் அவசரகால "கோப்ரா" குழு கூடிய நிலையில் தற்போது பிரித்தானியா முழுவதும் உள்ள யூதர்களின் ஆலயங்களுக்கு பொலிஸார் பாதுகாப்பு இடப்பட்டுள்ளது.
மேலும், இந்த தாக்குதலை ஒரு பயங்கரவாத சம்பவமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.