சம்மாந்துறை வீரமுனை வரவேற்பு வளைவு தொடர்பிலான வழக்கு:நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சர்ச்சைக்குரிய சம்மாந்துறை வீரமுனை வளைவு பிணக்கு தொடர்பில் இரு தரப்பினரும் சமூக பொறுப்புணர்வுடன் உணர்ந்து நடந்து இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும் என சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் மன்றில் அறிவுறுத்தல் வழங்கினார்.
சம்மாந்துறை வீரமுனை வரவேற்பு வளைவு தொடர்பிலான வழக்கு இன்று(15) திங்கட்கிழமை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பீ ஏ.ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன் போது சம்மாந்துறை பிரதேச சபை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும் பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் கனிஷ்ட சட்டத்தரணிகளான சுதர்சன் கமல் பெனிஸ்லஸ் துஷான் அ.நிதான்சன் ஆகியோர் மன்றில் தோன்றி இருந்தனர்.
வழக்கு விசாரணை
இரு தரப்பினரதும் வாதப்பிரதிவாதங்களை அடுத்து இரு தரப்பினரும் குறித்த விடயத்தில் சமூக பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதவான் நீதிமன்றத்தினால் பணிக்கப்பட்டது.
மேலும் இது அதிகாரம் சம்மந்தபட்ட விடயம் அல்ல என்பதுடன் இது சமூகம் சார்ந்த விடயம் எனவும் குறிப்பிடப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
இது தவிர இந்த வீரமுனை வரவேற்பு வளைவு பிணக்கை இணக்கமாக சட்ட அனுமதியோடு தீர்ப்பதற்காக அடுத்த வருடம் 09.01.2026 அன்று வரை குறித்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு
இரண்டு சமூகங்களும் சமூகமாக வாழ வேண்டும் என்று கருத்தினை கொண்டு இரண்டு சமூகங்களுக்கும் சேர்ந்து பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வர முடியுமாக இருந்தால் அனுமதியை கொடுப்பதில் தங்களுக்கு எந்த விதமான தடையும் இல்லை என பிரதேச சபை தெரிவித்தனர்.
[WKIT8
ஆகையினால் அடுத்த தவணைக்கு முன்னதாக இரண்டு சமூகங்களும் சேர்ந்து இதை எப்படியாவது தீர்த்துக் கொள்வது என்பதை குறித்து ஆராய்ந்து ஒரு இணக்கப்பாட்டிற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என பிரதிவாதிகளான ஆலய நிர்வாகம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களிடம் குறிப்பிட்டார்.


