மட்டக்களப்பு நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்: பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்
மட்டக்களப்பு நீதிமன்ற கட்டிட தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடு்த்து குறித்த பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை குண்டுவைத்து தகர்த்தப் போவதாக நேற்றிரவு (24) மட்டக்களப்பு பொலிஸாருக்கு கடிதமொன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து, உடனடியாக பொலிஸார் நீதிமன்ற பதிவாளர் நீதவான் தொலைபேசிக்கு உடன் தொடர்பு கொண்டு அறிவுறுத்தல் வழங்கியதுடன், கட்டிடத் தொகுதியை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
பலத்து தேடுதல் நடவடிக்கை
அத்தோடு, இந்த பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டுவருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்தநிலையில், இன்று (25) அதிகாலையில் இருந்து விசேட அதிரடிப்படையினர் பொலிஸார் இணைந்து கட்டிடத் தொகுதியில் மோப்பநாய் சகிதம் பலத்து தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பில் சியோன் தேவலாய குண்டு தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் சாரான் காசிமின், ஜ.எஸ்.ஜ.எஸ் என சந்தேகிக்கப்படுபவர்கள் மற்றும் பிரதான சூத்திரதாரிகளின் வழக்கு இந்த நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றதுடன் அந்த வழக்கின் ஆவணங்கள் இந்த நீதிமன்ற கட்டிட தொகுதி களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |