அநுரவுக்கே முழு ஆதரவு - சுமனரதன தேரர் பகிரங்க அறிவிப்பு
மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியதை அடுத்து, அவருக்கு தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக அம்பிட்டியே சுமனரதன தேரர் அறிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் அவர் வெளியிட்டுள்ள காணொளி அறிக்கை ஒன்றில், தாம் இனிமேல் "ராஜபக்ச நிகாய" அதாவது மஹிந்த முகாமில் இருந்து முற்றாக விலகிச் செயற்படப் போவதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தின் போது அவரைத் தொடர்புகொள்ள தாம் முயற்சிப்பதாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்தால் அடுத்தகட்டமாகத் தாம் ஒரு தீவிரமான நடவடிக்கையை முன்னோக்கி எடுக்கப் போவதாகவும் முன்னதாக ஒரு செய்தியைப் பகிர்ந்திருந்ததாகத் தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான வாய்ப்பு தமக்குக் கிடைக்கும் என்று தாம் ஆரம்பத்தில் எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முந்தைய செய்தியை அடுத்து, சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் (PSD) அதிகாரிகள் தலையிட்டு, ஜனாதிபதியுடனான சந்திப்புக்குரிய ஏற்பாடுகளைச் செய்துகொடுத்ததாகத் தேரர் தெரிவித்தார்.